விபூதி, சந்தனம்...


விபூதி, சந்தனம்
உலர்ந்த பசுவின் சாணியில் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து சுட்டெடுத்தால் சுத்தமான மணமுள்ள விபூதி கிடைக்கும்.ஆசாரங்களை அனுஷ்டிக்கும் இந்துவுக்கு சந்தனம் மிகவும் புனிதமான பொருள். தெய்வ பூஜைக்கு சந்தனம் இன்றியமையாததாகும். பித்ரு கர்மங்களிலும் இது உபயோகிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நினைக்கும் போது அவருடைய சந்தனம் பூசிய கார்மேக மேனி எழில் நம் நினைவுக்கு வருகிறது. லலிதா சஹஸ்ர நாமம் தேவியை சந்தனக் குழம்பு சார்த்திய அங்கங்களை உடையவள் "சந்தனத்ரவதிக்தாங்கீ" என்று சொல்கிறது.



இவ்விதம் எல்லாத் தெய்வங்களுடனும் சந்தனம் தொடர்புள்ளதாகும்.  குளிர்ச்சிக்கு மறுபெயர் எனத் திகழும் சந்தனத்திற்கு இந்து கலாச்சாரத்தில் முக்கியமான இடம் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் குளிர்ச்சியும், நறுமணமும் உள்ள சந்தனத்தின் மகிமையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மதச் சடங்குகளிலும், வரவேற்பு போன்ற நல்ல முகூர்த்தங்களிலும் சந்தனம் கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இது நம்முடைய அனுஷ்டானத்தின், ஆன்மிகத்தின் மற்றும் சுய நம்பிக்கையின் சின்னமாகும். இதற்கு அறிவியல் பூர்வமான மகிமையும் உண்டு. நோய்க்கிருமிகள், தோல் வியாதிகள் போன்றவற்றை அழிப்பதும், குளிர்ச்சி அளிப்பதும், இதயத்திற்கு நலன் அளிப்பதும், நாவின் ருசியின்மையை அகற்றுவதும், பித்தத்தை முறைப்படுத்துவதும் சந்தனத்தின் குணங்களாகும் என்று ஆரோக்கிய சாஸ்திரம் கூறுகிறது. பலம், நிறம், உடல் நலம், நல்ல மன உணர்வு, ஐஸ்வர்யம் ஆகியவற்றை சந்தனம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. பகவானுக்கு சந்தனம் சார்த்திய பிறகு பக்தன் அதை தனது நெற்றியில் வைத்துக் கொள்கிறான். மருத்துவ குணங்கள் உள்ள சந்தனத்தை அணிவது நமது உடலுக்கு நன்மை பயக்கும்.

அதனால்தான் ஆலயங்களிலும், வீடுகளிலும் பூஜை சமயங்களில் இதை கட்டாயமாக உபயோகிக்கின்றனர். மரணத்திற்குப் பின் இறுதிக் கிரியை செய்யும் பொழுது சந்தனக்கட்டை(சிறிய துண்டாவது) உபயோகிப்பது வழக்கம். எங்கும் நறுமணம் பரப்பி, அனைவருக்கும் குளிர்ச்சி நல்கும் சந்தனம் நமக்கு ஒரு வகையில் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. சந்தனத்தை தண்ணீருடன் சேர்த்து அரைத்து பகவானுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் நம்முடைய சமர்ப்பண மனோபாவம் வெளிப்படுகிறது. சந்தனம் தான் தேய்ந்து பிறருக்கு மணம் பரப்புகிறது.