மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
தமிழ்நாட்டில் உள்ள சிவபெருமானுக்கான கோவில்களில் மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயில் சிறப்புடைய ஒன்றாகும். இக்கோயில் அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
கோயில் வரலாறு
முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனைக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரம்
கோயிலின் அமைப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)
மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளம்
சிறப்பு விழாக்கள்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சித்திரை
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான்.
இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
வைகாசி
வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நக்ஷத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.
ஆனி
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆடி
ஆடி மாதத்தில் ஆயில்ய நக்ஷத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.
ஆவணி
ஆவணி
ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூல உற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல் திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.
புரட்டாசி
புரட்டாசி
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாக்ஷி அலங்கரிக்கப்படுகிறார்.
ஐப்பசி
ஐப்பசி
ஐப்பசி மாதப் பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடி இருந்து கோலாட்டம் ஆட, உற்சவம் நடக்கிறது.
கார்த்திகை
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.
மார்கழி
மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு அர்த்த ஜாமம் முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.
தை
தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.
மாசி
மாசி
மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது. இது கோயிலோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்லலாம்.
பங்குனி
பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.
மேலும், இங்கு தினசரி பூஜைகள் செய்யப்படுவதுடன் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
சிறப்புக்கள்
- சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
- சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
- சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
- சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
- இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
- ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
- இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
- நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
- மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.
- மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.
துணைக் கோயில்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்தில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவாதவூர் அருள்மிகு வாதபுரீசுவரர் கோயில், மதுரை, செல்லூர் அருள்மிகு திருவாப்புடையார் கோயில், மதுரை அருள்மிகு செல்லத்தம்மன் கோயில், மதுரை அருள்மிகு பழைய சொக்கநாதர் கோயில், நாகமலைப்புதுக்கோட்டை அருள்மிகு பிள்ளையார் கோயில், மதுரை, தெற்குமாசி வீதியிலுள்ள அருள்மிகு தென்திருவால சுவாமி கோயில், வண்டியூர் அருள்மிகு மாரியம்மன் கோயில், கொந்தகை அருள்மிகு பெருமாள் கோயில் ஆகியவை இருந்து வந்தது. தற்போது திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தனி நிர்வாகமாக மாற்றப்பட்டு விட்டது.
பயண வசதி
தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரை மாநகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலுமிருந்து பேருந்து, ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளது. விமானப் போக்குவரத்து வசதியும் உள்ளது. மதுரை நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஆட்டோ, கார் போன்ற வாகன வசதிகளைப் பயன்படுத்தலாம். நகரப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கினால் மேற்குக் கோபுர வாசலையும், சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் வடக்கு, கிழக்குக் கோபுர வாசலையும் தெற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் தெற்குக் கோபுர வாசலையும், விளக்குத்தூண் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் கிழக்குக் கோபுர வாசலையும் சிறிது தூரம் நடந்து சென்று அடைய முடியும். மக்கள் நெருக்கத்தால் கோயில் பகுதிக்கு அருகில் செல்ல நகரப் பேருந்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது