திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்




இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

கோயில் வரலாறு

ராமக்கோனார் என்கிற சிவபக்தர் அந்த ஊரின் அரசருக்கு வேணுவனம் என்கிற மூங்கில் காட்டைக் கடந்து சென்று தினமும் பால் கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் அந்தக்காட்டின் வழியே வரும் வரும்போதெல்லாம் ஒரு இடத்தில் கால் இடறி பால் குடம் கீழே விழுந்து பால் சிதறும். பானை மட்டும் உடையாது. இப்படியே தினமும் நடந்து கொண்டிருந்தது. பால் குறைவதற்குக் ராமக் கோனார் சொன்ன காரணம் கேட்டு அரசர் கோபமடைந்து சத்தம் போட்டார்.

மறுநாள் பால் கொண்டு வந்த ராமக் கோனார் கையில் கோடாலி ஒன்றையும் கொண்டு வந்தார். அந்த இடத்திற்கு வந்ததும் வழக்கம் போல் இடறியது. பால் பானை கீழே விழுந்து பால் சிதறியது. பானை உடையவில்லை. பூமிக்குள் புதைக்கப்பட்ட அல்லது வெட்டி எடுக்கப்பட்டது போக எஞ்சி நிற்கும் மூங்கில் துருத்திகள்தான் தன் காலை இடறி விடுகிறது என்கிற எண்ணத்துடன் தன் கையில் கொண்டு வந்த கோடாலியால் அவற்றை அகற்ற வெட்டத் துவங்கினார்.

அப்போது வெட்டப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறிப் பெருக்கெடுத்தது கண்டு பயந்து போனார். அங்கிருந்து ஓடிச் சென்று அரசரிடம் தான் கண்ட காட்சியைக் கூறினார். தினமும் பால் கொட்டுவதற்கான காரணம் கூறி வந்த கதையை நம்ப மறுத்த அவர் இந்தக் கதையைக் கேட்டு மிகவும் கோபமடைந்தார். இருப்பினும் ராமக்கோனார் சொல்லும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு முடிவெடுக்கலாம் என்கிற எண்ணத்துடன் தனது படை வீரர்களுடன் சென்றார்.

அங்கே துருத்திகள் வெட்டப்பட்ட இடத்தில் இரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அரசன் ராம பாண்டியன் உண்மை அறியவும், இரத்தப் பெருக்கு நிற்கவும் இறைவனை வேண்டினான். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த இடத்தில் கையை வைத்தான். இரத்தப் பெருக்கு நின்றதுடன், அந்த இடத்தில் இறைவன் லிங்க வடிவில் தோன்றினார். அதன் பிறகு அந்த இடத்தில் ஆகம விதிகளின்படி ஆலயம் ஒன்றையும் அமைத்தான்.

இந்தக் கோயில் வேணுவனநாதர் கோயில் என்கிற பெயருடன் சிறப்புற விளங்கத் தொடங்கியது.

நெல்லையப்பர் கோயில் இரவு நேரத் தோற்றம்

நெல்லையப்பர்

வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினார். தன் மேல் அளவு கடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணி வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தி வந்தார். இப்படிப் பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்த்தார். நெல்லைச் சுற்றி இருந்த மழை நீர் நெல்லைக் கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியந்தார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். அரசன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண வந்தார். நெல் நனையாமல் இருந்தது. உலகிற்காக மழை பெய்வித்து, வேதபட்டரின் நெல் மட்டும் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணு வனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.

நெல்வேலி என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது திருநெல்வேலியாக மாறிவிட்டது. நெல்வேலி நாதர் நெல்லையப்பர் என்று ஆகிவிட்டார்.
இங்குள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்று பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

காந்திமதியம்மன்

காந்திமதியம்மன் கோயில் முகப்புத் தோற்றம்

இத்திருத்தலத்தில் நெல்லையப்பருக்கு இருப்பது போன்றே காந்திமதியம்மனுக்கும் சமமானப் பிரிவுகளுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மன் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

கோயிலின் அமைப்பு

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி இருக்கிறது. அதனைக் கடந்து சென்றால் கொடிமரம் இருக்கிறது. கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய விநாயகர் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சிலைகளும் இருக்கிறது. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இதன் துவக்கத்தில் "இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஏழு ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் போன்ற சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சன்னதிகள் உண்டு. கோயிலின் மிகப்பெரிய உள் தெப்பம் இங்கு உள்ளது. கோயிலுக்கு வெளியே 50 மீட்டர் தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

நெல்லையப்பர் கோயில் தெப்பம்

இரண்டு கோயில்களுக்கும் கிழக்குப் பக்கத்தில் தனித்தனியே பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தென்பகுதியில் ஒரு வாசலும், வடக்குப் பகுதியில் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் உள்ளது. இதைப் போலவே சுவாமி கோயிலுக்கு வடபுறமும், மேற்குப் புறமும் தனித்தனியாக இரு வாசல்கள் இருக்கின்றன.

சிறப்புப் பூஜைகள்
  • சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
  • ஆனிப் பெருந்திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் தேரோட்டம் மிகச் சிறப்பான ஒன்றாக உள்ளது. தேரோட்ட நாளன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசுப் பணிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
  • ஆடிப்பூர உற்சவம், நவராத்திரி திருவிழா, ஐப்பசித் திருக்கல்யாண விழா போன்றவை இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள்
  • இக்கோயிலில் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகச் சிறப்பான ஒன்றாகும்.
  • காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் "தங்கப் பாவாடை" அலங்காரம் செய்யப்படுகிறது.
  • இந்தக் கோயில்களில் அனைத்து நாட்களிலும், தினசரி பூஜைகள் வழக்கம் போல் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்

சிறப்புக்கள்
  • சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் தாமிர சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும்.
  • திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ் மிக்க தலமாக விளங்குகிறது.
  • அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
  • இத்திருத்தலம் 32 தீர்த்தங்கள் கொண்டது என்கிற பெருமையுடையது.
  • இக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது.
பயண வசதி

தமிழ்நாட்டின் முக்கிய நகரமான திருநெல்வேலி மாநகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலுமிருந்து பேருந்து, ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து, திருநெல்வேலி நகர்ப் பகுதிக்கு நகரப் பேருந்து வசதி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ள முடிகிறது.