மனித வாழ்க்கையும் சக்ராக்களும்...



சக்ராக்கள் ஏழு வகையானது. இந்த ஏழு சக்ராக்கள் மனிதனுக்கு அரிய சக்தியை அதாவது ஆற்றல், அறிவு, விவேகம், பொறுமை, சாந்தம் போன்ற குணங்களைக் கொடுக்கிறது. சக்ராக்கள் மனிதனுடைய இயல்பை அதாவது தன்மையை குறிக்கிறது. ஸ்ரீசக்ரா ஏழு சக்ராக்களையும் ஒன்றாக இணைத்து இயக்குகிறது. ஏழு சக்ராக்கள் ஏழு கிரகங்களின் குணங்களை எடுத்துக் காட்டுகிறது. மூலதாரா, ஸ்வாதிஷ்தனா, மணிபுரா, அநாஹாடா, விசுத்தி, ஆஜனா, ஸஹஸ்ராரா என்று ஏழு வகைகளாக சக்ராக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பிறவி எடுத்தவுடன் மனிதனின் மனமும் மூளையும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த மூளை தெரியாதவொன்றை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறது. மனிதனுக்கு சிந்தனை அறிவை வளர்க்க சக்ராக்கள் பெரிதும் உதவி புரிகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சக்ராக்களின் குணங்களை கிரகங்களின் இயல்போடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அன்றைய ஜோதிடம் செவ்வாய் கிரகம் சிவப்பாகவும், சனி கிரகம் கருப்பாகவும் அல்லது நீலமாகவும் காட்சி தருகிறது என்று சொல்லுகிறது. சூரிய குடும்பம் ஒன்பது கிரங்களை கொண்டது. அவற்றுள் ஏழு கிரகங்கள் மனிதனுக்கு நல்ல பலன்கள் அல்லது கெட்ட பலன்களைக் கொடுக்கிறது.

அது போல எண்களுக்குள் ஏழாம் எண் மிகவும் விந்தையானது. இந்த எண் எதையும் யூகிக்க முடியாத நிலையையும், எதையும் சுலபமாகப் பெற முடியாத தன்மையைக் கொண்டது. ஏழு கிரகங்கள் மனிதனுக்குப் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கிறது. ஏழு கிரகங்கள், ஏழு கடல்கள், ஏழு காண்டங்கள், வானவில்லின் ஏழு நிறங்கள், ஏழு மலைகளுடைய ஏழுமலைவாசா, பைபிளில் கூறப்படும் ஏழு தேவாலயங்கள், எகிப்து புராணம் சொல்லும் ஏழு தேவதைகள், உலக ஏழு அதிசயங்கள், ஏழு நாட்கள் என்று ஏழாம் எண்ணின் குணங்களைப் பற்றி புராணங்கள் சொல்லுகிறது.

மூளை இடை விடாது செயல்படுவதால் மனிதனுக்கு மன அழுத்தம் உருவாகிறது. இதற்கு தியானம், யோகா, ரெய்கி போன்ற வழிகளை மேற்கொள்ளலாம். தோன்றும் எண்ணம், நிகழும் சம்பவம், கேட்கும் ஒலி அனைத்தையும் மறந்து மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யும் தியானம் முதல் வகையானது. பொதுவாக எழும்பும் அதிர்வால் மனிதன் விழிப்புணர்வை உருவாக்கி செய்யும் தியானம் இரண்டாவது வகையானது. தியானத்தை மேற்கொள்வதற்கு ஏழு சக்ராக்கள் பெரிதும் உதவுகிறது.

ஏதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்க வைக்கிறது. ஏதோ ஒரு அணுசக்தி உலகில் வாழும் உயிரினங்களை வாழ வைக்கிறது. காலச்சக்ராக்கள் மூலம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். இந்த சக்தி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போது புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. பூமியிலுள்ள தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் பூகம்பம் ஏற்படுகிறது, மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் புயல் அடிக்கிறது, கடல் அடியிலுள்ள மலைகள் மோதிக் கொள்வதால் கடல் கொந்தளிக்கிறது.

புயற்காற்று வட்டமான பாதையையும், பூகம்பம் விரிவான பாதையையும், கடல் கொந்தளிப்பு உயரமான பாதையையும் அமைத்துக் கொண்டு தோன்றுகின்றன. அது போல ஏழு சக்ராக்கள் மனித உடலில் ஒரு சக்தியை உருவாக்குகிறது. இந்த சக்தி மனிதனுக்கு புதிய சூழ்நிலையை கொடுக்கிறது. புதிய சூழ்நிலையே மனித வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைகிறது.

மனித உடலில் இடம் பெற்றுள்ள சக்ராக்கள் ஒவ்வொன்றும் அரிய சக்தியை கொடுக்கிறது. ஒவ்வொரு சக்ராவும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டது. ஒரு முழுமையான சக்ரா பல ஆயிரக்கணக்கான சக்ராக்களையும், பல்லாயிரக்கணக்கான நாடிகளையும் கொண்டது. இந்த சக்ராவானது உள்ளுக்குள்ளேயே சக்தியை உருவாக்கி, விழிப்புணர்வைக் கொடுத்து சுற்றி நிகழும் சம்பவங்களை பற்றி ஆராய்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துகிறது. ஏழு சக்ராக்களில் முதல் சக்ரா மூலதாரா சக்ரா என்று சொல்லலாம்.

மூலதாரா சக்ரா

‘ல’ என்ற அக்ஷரத்தைக் கொண்ட இந்த சக்ரா சூரியனைக் குறிப்பிடுகிறது. மரத்துடைய வேரைப் போல மூலதாரா சக்ரா மனித உடலில் வலிமையான அஸ்திவாரத்தை உருவாக்குகிறது. இந்த சக்ரா மற்ற சக்ராக்களுக்கு சக்தியைக் கொடுக்கிறது. சூரியன் உலகத்திற்கு வெப்பத்தை கொடுப்பது போல மூலதாரா சக்ரா உடலுக்கு வெப்பத்தை கொடுக்கிறது. தேவையான வெப்பத்தை ஏற்றுக் கொண்டு மற்றவையை ஆசன வாயின் வழியாக வெளியேற்றுகிறது. மூலதாரா சக்ரா மனித உடலில் ஆசன வாயை இடமாக அமைத்துக் கொண்டுள்ளது.

ஸ்வாதிஷ்தனா சக்ரா

 மனிதனுக்கு காம உணர்வுகளை கொடுக்கிறது. இந்த சக்ரா இன்னொரு ஜீவனை படைக்க வல்லமை பெற்றது. ஆதனால் இந்த சக்ரா உடலில் கர்ப்பப் பகுதியை தனது இடமாக அமைத்துக் கொண்டுள்ளது. இந்த சக்ரா சுக்ர கிரகத்தின் குணத்தைக் கொண்டது. மனிதனின் ஜாதகத்தில் சுக்ரன் நீசம் பெற்றிருந்தால் கெட்ட சகவாசத்தையும், அது போல உச்சம் பெற்றிருந்தால் அனைத்து சுக போகங்களையும் வாரி வழகுகிறது. அது போல இந்த சக்ரா மனிதனுடைய காம இச்சைகளைப் பூர்த்தி செய்கிறது.

மணிபுரா சக்ரா

 ‘ர’ என்ற அக்ஷரத்தை கொண்ட இந்த சக்ரா உடலில் தொப்புள் கீழேயும் கணையத்தின் முன் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது.ஜோதிட சாஸ்திரத்தில் இந்த சக்ராவை புதன் கிரகத்தோடு ஒப்பிட்டு எழுதப் பட்டுள்ளது. உச்சம் பெற்ற புதன் மனிதனுக்கு சிறந்த படிப்பையும் அறிவாற்றலையும் கொடுக்கிறது. அது போல இந்த சக்ராவும் மனிதனுக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுக்கிறது.

அநாஹாடா சக்ரா

‘ய’ என்ற அக்ஷ;ரத்தை கொண்ட இந்த சக்ரா உடலில் இருதயத்தை தனது இடமாக அமைத்துக் கொண்டுள்ளது. மேலே இடம் பெற்றுள்ள மூன்று சக்ராக்களுக்கும், கீழே இடம் பெற்றுள்ள மூன்று சக்ராக்களுக்கும் நடுவில் இடம் பெற்றுள்ள அநாஹாடா சக்ரா அனைத்து உறுப்புகளையும் இயங்க வைக்கிறது. ஜோதிட வழியாக இந்த சக்ரா சந்திர கிரகத்தோடு ஒப்பிட்டு பேசப்படுகிறது. மனித வாழ்க்கையின் வளமான வளர்ச்சிக்கு இந்த சந்திர கிரகம் உதவுவதைப் போல அநாஹாடா சக்ரா ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கிறது.

விசுத்தி சக்ரா

 ‘ஹ’ என்ற அக்ஷரத்தை கொண்ட இந்த சக்ரா மனிதனின் தொண்டைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஜோதிடம் இந்த சக்ராவை செவ்வாய்க் கிரகத்தோடு ஒப்பிடுகிறது. செவ்வாய்க் கிரகம் மனிதனுடைய நன்னடத்தை பற்றி, சொல் சுத்தத்தை பற்றிக் குறிப்பதைப் போல இந்த சக்ரா மனிதனுக்கு தூய்மையான சொல்லையும் சுத்தமான மனதையும் கொடுக்கிறது. எந்த சூழ்நிலையிலும் செவ்வாய் கிரகம் மனிதனுக்கு துணிச்சலைக் கொடுப்பது போல விசுத்தி சக்ராவும் உடலில் தோன்றும் மாற்றங்களைப் பக்குவத்தோடு ஏற்றுக் கொண்டு இயங்க வைக்கிறது.

ஆஜனா சக்ரா

 ‘ஓம்’ , ‘அஹம்’ என்ற அக்ஷரங்களைக் கொண்ட இந்த இரு சக்ராக்களும் மனித உடலில் மேல் பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஆஜனா சக்ரா நெற்றிப் பகுதியையும், ஸஹஸ்ராரா சக்ரா மண்டைப் பகுதியை இடமாக அமைத்துக் கொண்டுள்ளது. ஆஜனா சக்ராவை குரு கிரகத்தோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. உச்சம் பெற்ற குருகிரகம் மனித வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. அது போல ஆஜனா சக்ரா மனிதனுக்கு திருஷ்டியை நெறிப்படுத்தி உயர்ந்த குணத்தை கொடுக்கிறது.

ஸஹஸ்ரா சக்ரா

ஸஹஸ்ரா சக்ரா ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்தோடு ஒப்பிட்டு எழுதப் பட்டுள்ளது. சனி கிரகம் மனிதனின் ஆயுளைக் குறிப்பதைப் போல ஸஹஸ்ரா சக்ரா மனிதனுக்கு ஞான திருஷ்டியையும், தெளிவான சிந்தனையைக் கொடுத்து, இறை வழியைப் நாடும் பாதையைக் காட்டுகிறது. சக்ராக்கள் மனித இயல்போடு இணைந்துள்ளது. மனிதனுடைய வாழ்க்கையை உயர்த்துவதில் பெரிதும் உதவுகிறது.

இதை அறிந்து செயல்பட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.