மதம்...


மதம்
உயர்வு பெறுவதற்கான நிலையான பல உண்மைகள் இவ்வுலக வாழ்க்கைக்கு அப்பால் இருப்பதை உணர்ந்து கொள்ளுகின்றான். இப்பொழுது உயர்நிலை வளர்ச்சியையும் பெற்றுள்ள மனிதன் தன்னைத் தானே உணர்ந்து கொள்கின்றான். இவ்வாறான அறிவுபூர்வமான அடித்தளத்தை ஒரு மதம்தான் அமைத்துக் கொடுக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து. மேற் சொன்ன இருநிலை வளர்ச்சிகளையும் புரிந்துகொண்டால் மனிதன் வளர மதம் துணைநிற்கும். புரிந்து கொள்ளாவிட்டால் வேற்றுமை, பிரிவினை சர்ச்சைகள் தான் தோன்றும். குறிப்பாக மதம் என்ற பதம் யாரையும் வதம் செய்யக்கூடாது.

வாழ்க்கையில் ஆன்மீகம் எப்படிப்பட்டது?


பிறருக்குத் துன்பம் கொடுத்து அதில் இன்பம் காண்பது மிருக இயல்பு படைத்தவர்களின் குணம். பிறருக்கு துன்பம் கொடுக்காமல் தனக்கு இன்பம் தேடுவது நாகரீகப் பண்பாடு. பிறருக்கு இன்பம் கொடுத்துத் தானும் இன்பமடைவது தெய்வீகம். தனக்கு துன்பம் நேர்தாலும், பிறருடைய துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பம் தருவது தான் ஆன்மீகம் என்று இந்து தர்ம சாத்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஆன்மீக வாழ்வியலில் தான் இறைவனைக் காணமுடியும்.

ஆன்மீகத்துக்கு  ஆரம்ப நிலையென்று எதைக் கூறுவீர்கள்?

நான், எனது என்ற அகந்தையை ஒழிப்பது தான் ஆரம்ப நிலையாகும். ஞானிகள் பேசும் பொழுது “நான்” என்பதற்குப் பதிலாக எப்பொழுதும் “நாங்கள்” என்றே பேசுவார்கள். இப்படி அகந்தையற்ற நிலையை அருளும்படி பட்டினத்தார் இறைவனை நோக்கி

“ஊன் நிறைந்க காயம் உயிர் இழந்து போகுமுன்னே
 நான் இறந்து போக நல்லவழி நீயருள்வாய் “
                                                                                       என்று வேண்டி நிற்கின்றார்.

நாமெல்லோரும் இறைவனை வழிபடுகின்றோம். இருப்பினும் நாம் செய்கின்ற வினைகளைப் பொறுத்துத்தான் நமது வாழ்க்கை அமைகின்றதென்று சொல்லும் பொழுது எதற்காக இறைவனை வணங்க வேண்டும்?


இறைவனை வணங்குவதன் காரணமாக நாம் செய்த வினைகள் நலிவடைந்து விடுகின்றன. அதன் பொருட்டு பெருமளவில் வரவிருந்த துன்பங்கள் சிறிய அளவில்தான் (தலைக்கு வரவிருந்தது தலைப்பாகையுடன் சென்றுவிட்டது என்பது போல) நம்மைவந்து சேரும். அதுமட்டுமன்றி வினைகளினால் வரக்கூடிய துன்பங்கள் ஒரே சமயத்தில் நம்மைப் பாதிக்காமலிருப்பதற்கும் இறை வழிபாடு முக்கியம்.

ஒரு வேண்டுதலை முன்வைத்து சிறிய காணிக்கையைச் செலுத்தி பெரிய உபகாரத்தை இறைவனிடத்தில் வேண்டுவது பற்றி உங்கள் கருத்து?

ஆலயத்துக்குச் சென்று இறைவன் எம்மைப் படைத்து வாழவைத்தமைக்கு நன்றி செலுத்தி இறைவனை வணங்க வேண்டுமென்றே ஆன்மீகப் பேரறிஞர்கள் கூறுகின்றார்கள். “அம்மையே அப்பா” என்றும் “தாயினும் சாலப்பரிந்து” என்றும் தோத்திரங்களிலே பெற்றோராக வர்ணிக்கப்படுகின்ற இறைவனிடத்தில் பிள்ளைகளாகிய நாங்கள் எதனையும் கேட்டுத்தான் பெற வேண்டும் என்றில்லை. பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது தாமாகவே உணர்ந்து செய்வது போல எம்மைப் படைத்தவருக்கும் எமக்கு எவை தேவையென்பது நன்றாக தெரியும். அவற்றை அவர் தவறாது நிறைவேற்றி வைப்பார். இதை நாங்கள் காணிக்கை செலுத்துவதன் மூலமாகத்தான் பெறவேண்டு மென்றில்லை. இறைவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் தூய அன்பு ஒன்றை  மட்டும்தான்.
இதைத்தான்

“ பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
 ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மன. “

அதாவது ” பக்தியுடன் எவனொருவன் எனக்கு இலையோ, மலரோ, கனியோ, நீரோ அளிக்கிறானோ தூய மனம் கொண்ட அவனது பக்தியின் பொருட்டு நான் அதை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன்.” என்று இறைவன் கூறுகின்றார்.

மலரோ, இலையோ, கனியோ, நீரோ போதுமென்றால் விநாயகர் தனது கையிலே மோதக்கத்தை வைத்திருப்பது எப்படி?


சரணாகதி தத்துவத்தை வெளிப்படுத்துவதே விநாயகப் பெருமான் கையில் மோதகத்தினை வைத்திருப்பதாக ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்ன தோத்திரத்தில்

“முதா கரார்த்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்”

என்று கூறுகின்றார். மோதகம் என்னும் பொழுது அதிலே இரண்டு பொருட்கள் உள்ளன. ஓன்று மாவினாலான கிண்ணம் இரண்டாவது உள்ளேயிருக்கின்ற பூரணமாகும். மாவினாலான கிண்ணம் நமது உடம்பாகும்; அதனுள்ளே இருக்கின்ற பூரணம் ஆன்மாவாகும். இவையிரண்டையும் விநாயகர் கையில் ஒப்படைத்து விட்டால் அதாவது அவரைச் சரணாகதி அடைந்து விட்டால் நாம் முக்தியடைவது நிச்சயமாகும் என்பதைத்தான் உணர்த்துகின்றது.

இப்பிறவியில் நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகள் மறுபிறவியிலும் நம்மை வந்தடையுமா ? அல்லது இப்பிறவியிலேயே முடிந்து விடுமா?


நாம் செய்கின்ற வினைகள் பக்குவப்படாமல் இப்பிறவியில் அனுபவிக்கப்படாதவை அடுத்த பிறவியிலும் நம்மை வந்தடையுமென்று சித்தர்களும் ஞானிகளும் உறுதிப்படக் கூறியுள்ளார்கள். உதாரணமாக

"என் செய லாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப் பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙூனமே வந்து மூண்டதுவே"

என்று பட்டினத்தார், தான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை கிடைக்கும் பொழுது இறைவனை விழித்து இவ்வாறு பாடுகின்றார்.

ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு கடைப்பிடிக்கப்பட வேண்டிய நற்குணங்கள் எவை?


பொறுமை, அடக்கம், பற்றின்மை, நடுநிலை, நம்பிக்கை, அமைதி போன்றவையாகும்.

பதி, பசு, பாசம் என்றால் முறையே இறைவன், ஆன்மா, மலம் என்று படித்திருக்கின்றேன்; இவைகளின் தொழிற்பாடு பற்றி கூறுவீர்களா?

ஆம், இறைவன் அதாவது கடவுள் என்பவர் ஒருவர் தான். அவரை சிவன் என்று சொல்லுகின்றோம். அவர் வடிவமற்றவராக இருப்பினும் அவரது திருவருட் செயல்களினால் நாம் அவரை உணர்ந்து கொள்ள முடியும். அவர் தனது சக்தியினாலே வெவ்வேறு தொழில்களைச் செய்வதனால் வெவ்வேறு பெயர்களைத் தாங்கி நிற்கின்றார். உதாரணமாக ஜனனி, சோதயித்திரி, ஆரணி என்ற சத்திகளைக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பொழுது பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கின்றார். பிரபஞ்சத்துக்கு மூலமாகிய மகாமாயைக்குத் தலைவராக விளங்குகின்ற சிவபெருமானுக்கு விநாயகர் என்று பெயர். குருவாயிருந்து மெய்யறிவைக் கொடுக்கும் சிவபெருமானுக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர். இவ்வாறாக கூறிக்கொண்டே போகலாம். இதுபற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.

அடுத்து பசுவாகிய ஆன்மாக்கள் பொதுவாக மலத் தொடர்பு கொண்டவை மட்டுமன்றி அறியும் வல்லமையும் பெற்றவை. சிவனுடைய திருவருளினாலே மல நீக்கம் பெற்று சிவத்தன்மை அடையத்தக்கவை. அவ்வாறு சிவத்தன்மை பொருந்து முன்னர் அளவில்லாத பிறவிகள் பொருந்தி நிற்பவையாகும்.

அடுத்து பாசம். அதாவது மலங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் குறிக்கின்றது. ஆணவமலமானது  ஆன்மாக்களுக்குப் பொய்யறிவை கொடுப்பதாகும். ஆனாலும் ஆணவமலத்தின் தொழிற்பாட்டினால், ஆன்மாக்கள் செய்கின்ற ஆணவச் செயல்களின் பயனை அனுபவிப்பதன் மூலம் ஆணவத்தின் வலிமை குன்றிவிடும். அதன் பொருட்டு இறைவழிச் செயற்பாடுகளினால் மெய்யறிவைப் பெறக்கூடியது. கன்மம் என்பது ஆன்மாக்கள் செய்கின்ற வினையாகும். மாயை சிற்றறிவைக் கொடுக்க வல்லது. சிற்றறிவு என்று இங்கே குறிப்பிடப்படுவது உலக அறிவாகும். மாயையிலே சுத்தமாயை, அசுத்தமாயை என இரு பகுதிகளுண்டு. ஆன்மாவுக்கு அன்பு, அறிவு, வல்லமை போன்றவைகளைக் கொடுக்கும் சிவதத்துவங்கள் சுத்தமாயையிலிருந்தும் ஆத்மதத்துவங்கள், வித்யாதத்துவங்கள் போன்றவைவகள் அசுத்தமாயையிலிருந்தும் தோன்றுமென்று சொல்லப்பட்டுள்ளது.

சிலர் பேசும் பொழுது “அதற்கெல்லாம் பிராரப்தம் இருக்க வேண்டும்” என்று கூறுவதைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அப்படியென்றால் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று பொருள்படுமா?


நீங்கள் கேள்விப்பட்ட வசனத்திலுள்ள கருத்து சரியானது. பிரார்த்தம் அல்லது பிராரப்தம் என்பது முன்வினைப் பயனைக் குறிக்கும். நாம் இப்போ அனுபவிப்பவைகளெல்லாம் நாம் செய்த முன்வினைகள் தான் (நல்வினை, தீவினைகளின் பொருட்டு) அதாவது நமது வினைகளை பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

நாம் இப்போ அனுபவிப்பது பிராரப்தம் எனப்படும்.
முன்னர் நாம் செய்து அனுபவிக்கப்படாமலிருப்பது சஞ்சிதம் எனப்படும்.
நாம் இப்போ செய்பவைகளெல்லாம் ( நல்வினை,தீவினை ) ஆகாமியம் எனப்படும்.

ஆலயத்திலே நடைபெற்ற திருமண விழா ஒன்றில், வந்திருந்த சபையோர்களில் சிலர் இறைவனுக்குச் சூட்டப்பட்ட மலர்களிலாலே மணமக்களை ( தாலி கட்டும் பொழுது)  ஆசீர்வதித்தார்கள்.  இப்படிச்செய்யலாகுமா?


இது சரியா அல்லது தவறா என்பது தெரியவில்லை. இருப்பினும் ஆலயங்களிலே எல்லாச் சந்நிதானங்களிலேயும் இறைவனது விக்கிரகங்களே இருக்கின்ற போதிலும் ஒரு சந்நிதானத்தில் சூட்டப்பட்ட மலர்களை வேறொரு சந்நிதானத்தில் சூட்டுவதில்லை. திருமண வைபவத்தின் பொழுது கன்னிகாதானத்தினை நடத்திவைக்கின்ற குருவானவர் மணமக்களை சிவனாகவும், உமாதேவியாராகவும் பாவித்து அவர்கள் சற்று உயரத்திலேயும் தான் கீழேயுமாக அமர்ந்திருந்து திருமாங்கல்ய தாரணத்தின் பின்னர் மணமகளை மணமகனின் இடப்பாகத்திலே அமரவைக்கின்றார் (சிவனும் தனது இடப்பாகத்தை உமாதேவிக்கு அளித்தார்). எனவே இச்சந்தர்ப்பத்தில் மணமக்களும் பார்வதி சமேத பரமேஸ்வரனாகக் கருதப்படுவதால் சூட்டப்படாத மலர்களைப் பயன்படுத்துவது தான் சிறந்ததாகும்.

“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று வாழ்த்தும் பொழுது சொல்லப்படுகின்ற பதினாறும்  எவைகளென்று கூறுவீர்களா?


பதினாறு என்று கூறப்படுவது

1.புகழ் 2. கல்வி 3. ஆற்றல் 4. வெற்றி 5. நன்மக்கள் 6. பொன் 7. நெல் 8. அழகு 9. பெருமை 10. ஆயுள் 11. நல்வினை 12. இளமை 13. அறிவு 14. துணிவு 15. நோயின்மை 16. நுகர்ச்சி போன்ற பதினாறு போகங்களு மாகும்.

திருமண வைபவத்தில் அட்சதையிட்டு மணமக்களை வாழ்த்துகின்றோம். “அட்சதை” என்பதன் பொருள் யாது?

க்ஷதை என்றால் வடமொழியில் குறைவு என்று பொருள். அ+க்ஷதை என்றால் குறைவற்றது என்று பொருள்படும். எனவே மணமக்கள், எல்லாம் நிறைந்த நல்வாழ்வு வாழவேண்டுமென்ற பாங்கினில் தான் அட்சதையிட்டு வாழ்த்துகின்றோம்.