இயேசு ஒரு குயவன்

இயேசு ஒரு குயவன்


சர்வத்தையும் சிருஷ்டித்த தேவன், தான் சிருஷ்டித்த உலகிலே தம்மோடு கூட மகிழ்ச்சியாய் ஜீவிக்க உருவாக்கிய மனிதனை, ஒரு கைப்பிடி மண்ணினாலேயே உருவாக்கினார். "தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவத்துவமானவன்" (ஆதி2:7). தேவனோடு ஜீவித்துக் கொண்டிருந்த இந்த மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டதால், பாவம் அவனை ஆட்கொள்ளவே, அவனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த தொடர்பு அற்றுப் போயிற்று. ஆனால் தேவனோ, திரும்பவும் தாம் சிருஷ்டித்த மனிதனை தம்மோடு தொடர்பு கொள்ள வைக்கத் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி, மனிதனைப் பாவத்தில் இருந்து மீட்டுக்கொண்டார். இந்த மீட்பினால், பாவத்திற்குள் மரித்த மனிதனின் ஆத்துமா பாவத்தில் இருந்து மீட்கப்பட்டுத் திரும்பவும் தேவனிடத்திற்குப் போகும் சிலாக்கியத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனால், மண்ணினால் உருவாக்கப்பட்ட நமது உடலோ திரும்பவும் மண்ணிற்கே செல்கிறது.

அன்பானவர்களே! நமது ஆத்துமா, தேவனிடத்திற்குச் செல்லுவது இலகுவான காரியம் அல்ல. நாம் என்றைக்கு பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு மீட்பைப் பெற்றுக் கொள்கிறோமோ, அன்றிலிருந்து, ஒரு குயவன் கையில் உள்ள பாத்திரத்தைப் போலாகிறோம் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

ஆம்! ஒரு குயவன் ஒரு பாத்திரத்தை வனையும் போது, அப்பாத்திரம் நல்ல அழகான, கனமுள்ள, எல்லோராலும் உபயோகப்படக்கூடிய பாத்திரமாகவே வனைவான் இல்லையா? இப்படியாக குயவன் வனையும் போது, அவன் களிமண்ணை பண்படுத்தி, சுத்தம் செய்து, பதப்படுத்தியே அழகான பாத்திரமாக வனைந்து முடிப்பான்.

இயேசு எனும் குயவன் கையிலிருக்கும் மனிதனே! இயேசுவின் கரத்தில் என் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்தேன். ஆனால், என் வாழ்க்கையில் ஏன் இத்தனை பாடுகள், நெருக்கங்கள். நான் ஏன் தினமும் உடைந்த பாத்திரம் போலாகிறேன் என்று கண்ணீர் விடுகிறாயா? கலங்காதே! களிமண்ணான உன்னை, இயேசு, தமக்குப் பிரியமான பாத்திரமாக வனைந்து முடிக்கவே, இப்பாடுகளின் பாதை வழியாக அழைத்துச் செல்கிறார். "குயவனே, களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே" என்று கூறி விசுவாசத்தில் நிலைத்திரு. அப்பொழுது, எப்பாடுகள் மத்தியிலும் நீ அழகானதும், பிரயோஜனமானதுமான, தேவனால் உபயோகிக்கப்படும் பாத்திரமாக வனையப் படுவாய்.