சித்திரா பௌர்ணமி...

சித்திரா பௌர்ணமி

சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் சந்திரன் முழுக்கிரணத்தையும் சித்திரையின் கிரணத்தோடு சேர்த்துப் பூமிக்கு அளிக்கிறார். இது போன்றதொரு நிலை வேறு எந்த நாளிலுமே ஏற்படுவதில்லை. அதனால் இந்த நாள் மிகவும் சிறப்புடைய நாளாகக் கருதப் படுகிறது.  சித்திரை மாதம் சித்திரைநாளில் சித்திர புத்திரனார் தோன்றினார். எனவே அன்று கடைப்பிடிக்கின்ற விரதத்தை சித்திரகுப்த விரதமென்று கூறுவார்கள்.

அவரவர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்துக் கொடுக்கும் பணி சித்திரகுப்த நாயனாரின் பணியென்று இந்து மத சாத்திரங்கள் கூறுகின்றன. மக்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு இயமதர்மராஜன் நீதி வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. நாம் செய்யும் குற்றங்களைச் சித்திரம் போல இரகசியமாகத் தம் மனதில் நிலை நிறுத்திக் கொள்வதால் இவருக்குச் சித்திரகுப்தன் எனப் பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். இந்நாளில் இவரை வழிபட்டு இயமன் பயத்திலிருந்து சற்று மீளலாம் எனவும் கூறுவார்கள். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. அங்கேயுள்ள சித்திரகுப்தனார் உருவச்சிலையின் ஒரு கையில் ஏடும் மறுகையில் எழுத்தாணியும் காணப்படுகின்றது. சித்திரா பௌர்ணமியன்று இந்திரன் வந்து பூஜிப்பதாக ஐதீகம்.

 ஒரு சமயம் தேவேந்திரன் பல புண்ணியத் தலங்களையெல்லாம் தரிசித்து விட்டு அடர்ந்த காட்டுப் பகுதியை வந்தடைந்தான். அவன் அந்த இடத்தில் காலடி எடுத்து வைத்ததும் எங்குமே கிடைக்காத ஓர் புத்துணர்சியை உணர்ந்தான். தன்னிடதில் இருந்த பிணிகள் எல்லாமே மறைந்துவிட்ட நிலை ஏற்படுவதை உணர்ந்து கொண்டான். இதனால் ஆச்சரியமடைந்த தேவேந்திரன் காரணத்தை அறிந்து கொள்ள அவ்விடத்தைச்சுற்றி நோட்டமிட்டான். ஆவன் ஆச்சரியப் படும்படியாக  அங்கே தாமரைத் தடாகத்தில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டான். அந்தச் சிவலிங்கத்தினால் தான் தனது பாவங்களும் பிணிகளும் நீங்கியருக்க வேண்டுமென்று உறுதிசெய்து கொண்ட தேவேந்திரன், உடனே தேவதச்சனாகிய விசுவகர்மாவை வரவழைத்து அந்த இடத்தில் அழகிய கோவில் ஒன்றைக் கட்டினான். ஈஸ்வரிக்குத் தனிச் சன்னதியொன்றையும் அருகே அமைத்தான். வழிபாடு செய்ய மலர்கள் இல்லாததால் குளத்தில் பொற்றாமரையை வரவழைத்து இலிங்கத்தை வழிபட்டான். இந்திரன் இவ்வாறு சிவனை வழிபட்ட நாளே சித்திரா பௌர்ணமியாகும். சித்திரா பௌர்ணமியன்று இந்திரன் இலிங்க வழிபாடு செய்ய வருகிறார் என்பது வரலாறு. இந்திரனால் நிறுவப்பட்ட அந்தவனம் தான் கூடல்மாநகரம் எனப்படும் மதுரையாகும்.

 சித்திரா பௌர்ணமி மதுரையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் அன்றைய தினத்தில் ஆதிசங்கரர் ஜயந்தியும், சித்திரகுப்தர் திருக்கல்யாணமும், ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.