பாம்பாக மாறிய பாம்படம்

பாம்பாக மாறிய பாம்படம்


















தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகே உள்ள அந்த கிராமத்தின் பெயர் வேப்பங்காடு. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பாலையா-உமய பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளளும், 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். கடைசி குழந்தை பிறந்த சில மாதங்களில் பாலையா இறந்து விட்டார்.

உமய பார்வதிதான் கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வளர்த்து வந்தார். கூலி வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதவில்லை. அதனால், அவரது குடும்பம் வறுமையில் தத்தளித்தது.

இதையடுத்து, நெல் வியாபாரிகளிடம் இருந்து 20 படி நெல்லை வீட்டிற்கு வாங்கி வந்து, அதை புழுங்கல் அரிசியாக்கி, அதில் 10 பிடி அரிசியை நெல் வாங்கிய வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஓரிரு படி அரிசியைக் கொண்டு கஞ்சிக் காய்ச்சி பிள்ளைகளுக்கு கொடுத்தார்.

காலம் வேகமாக ஓடியது. உமய பார்வதிக்கு வயது 42ஐ தொட்டது. ஆனால், குடும்ப வறுமை மட்டும் ஓய்ந்த பாடில்லை.

"இறைவா! எத்தனை நாட்களுக்குத்தான் நாங்கள் இப்படி வறுமையில் தவிப்போம். எங்களுக்கு கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டாயா?"என்று பல நாட்கள் அவள் அழுது புலம்பியது உண்டு.

இந்நிலையில், சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் மகிமைகள் பற்றி கேள்விப்பட்ட அவள், நேராக சாமிதோப்பு நோக்கி புறப்பட்டாள். மூத்த மகனையும், ஒரு கைக்குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றாள்.

அந்தக் காலத்தில் வாகன வசதி கிடையாது என்பதால் பனங்காடுகள் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். சுமார் 50 மைல் தூரம் நடக்க வேண்டியது இருந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல் பயணத்தை தொடர்ந்தாள்.

ஓரிடத்தில், எதிரே வந்த குடிகாரர்கள் இரண்டுபேர் அவளை வழிமறித்தனர்.

"வைத்திருக்கும் பணத்தை கொடு" என்று கேட்டு அவர்கள் மிரட்டினர்.
"என்னிடம் பணம் எதுவும் இல்லை" என்று அவள் அழுது புலம்பியபோது, அவள் காதுகளில் கிடந்த பாம்படத்தைக் (ஒருவகை தங்கக் காதணி/ சில இடங்களில் தண்டட்டி என்றும் சொல்வதுண்டு) கவனித்தனர் அந்த குடிகாரர்கள்.

"பணம் எதுவும் இல்லை என்று சொல்கிறாய். ஆனால், காதுகளில் பாம்படம் கிடக்கிறதே; அதை கழற்றிக்கொடு. இல்லையென்றால், காதை அறுத்து எடுத்துக் கொள்வோம்" என்று மிரட்டினர் அவர்கள்.

"என் குடும்ப சூழ்நிலை புரியாமல் பேசுகிறீர்களே. சாப்பிடக்கூட வழி இல்லாத என்னிடம் மீதம் இருப்பது இந்த பாம்படங்கள்தான். இதையும் நீங்கள் கேட்டால், நான் எங்கே போவேன்?" என்று கூறியபடியே மீண்டும் அழுதாள்.

தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினாள். அவளது பிள்ளைகள் குடிகாரர்களை மிரட்டிய மாத்திரத்தில் அழ ஆரம்பித்து விட்டனர்.

"இனி உன்னிடம் பேசி பலனில்லை. ஒரே போடாக போட்டு கொன்றால்தான் எங்களுக்கு பாம்படம் கிடைக்கும்" என்று அவர்கள் சொன்னபோது, அவள் அதிர்ந்தே போய்விட்டாள்.

அந்த இடம் நடு காட்டுப்பகுதி என்பதால் அடுத்தவர்களின் உதவியைக்கூட அவளால் எதிர்பார்க்க முடியவில்லை.

கடைசியில், வேறு வழியில்லாமல் தனது இரு பாம்படத்தையும் அந்த குடிகாரர்களிடம் கழற்றிக் கொடுத்தாள்.

பாம்படத்தை பறித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
உமய பார்வதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குழந்தைகளை அணைத்துக்கொண்டு அழுதாள்.

"அய்யா! உம்மைத் தரிசிக்க வந்த எனக்கு இப்படி சோதனைகள் வர வேண்டுமா? இந்த பாம்படத்தை விற்று எனது பிள்ளைகளுக்கு கஞ்சிக் காய்ச்சிக் கொடுத்தால் ஒரு மாத காலமாவது வயிறார குடித்திருப்பார்களே!" என்று அய்யா வைகுண்டரிடமே முறையிட்டாள்.

இருந்தாலும், நம்பிக்கையை தளர விடாமல் அய்யாவை தரிசிக்கும் பொருட்டு சாமிதோப்பு நோக்கி வேகமாக விரைந்தாள்.

சாமிதோப்பை அடைந்தாள்.

அங்கே அய்யாவை அவள் கண்டபோது அவளது கவலைகள் எல்லாம் சூரியன் கண்ட பனியாய் விலகியதுபோல் இருந்தது. அவளை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன.

கூப்பிய கரங்களோடு அய்யாவின் பாதத்தில் விழுந்து அழுதாள். தன் குறைகளையும், வறுமை நிலையையும் சொல்லி முறையிட்டாள். வழியில், பாம்டத்தை பறிகொடுத்த கதையையும் சொன்னாள்.
"அம்மா! இனி நீ அழ வேண்டாம். உன் பாம்படம் அவனுக்கு பாம்பாகிப் போச்சு. அதுவே உனக்கு பாக்கியமாச்சு" என்றார்.

இதைகேட்ட மாத்திரத்தில் அய்யாவின் திருப்பாதங்களை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள் உமய பார்வதி. தொடர்ந்து, அய்யாவின் பாதங்களைத் தொட்டு எழுந்த அவளது முகத்தில் ஒருவித மலர்ச்சி தென்பட்டது.

அருகில் இருந்த திருமண்ணை எடுத்து அவளுக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து நெற்றியில் நாமமிட்டுக் கொள்ளுமாறும், அங்குள்ள முந்திரிக் கிணற்றில் குளித்துவிட்டு வருமாறும் பணித்தார் அய்யா.

இதையடுத்து, உமய பார்வதி தனது குழந்தைகளோடு முந்திரிக் கிணற்றை நோக்கிச் சென்றாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் அய்யாவின் இருப்பிடத்தைத் தேடி ஒருவர் வேகமாக ஓடி வந்தார். அவர் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கியதில் இருந்தே, எத்தகைய பரபரப்போடு ஓடி வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டார் அய்யா.

வேகமாக வந்தவர் தன்னிடம் இருந்த இரு பாம்படத்தையும் அய்யாவின் காலடியில் வைத்து, வந்த பரபரப்பு அடங்காமலேயே பேசினார்.

"அய்யா! இந்த பாம்படங்களை இரண்டு குடிகாரர்கள் என்னிடம் கடனுக்காக கொண்டு வந்து கொடுத்தனர். அவற்றை வாங்கி என் பட்டறைப் பெட்டியில் பூட்டி வைத்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு பெட்டியைத் திறந்த போது, அதற்குள் இரண்டு நல்ல பாம்புகள் இருந்தன. என்னைப் பார்த்ததும் சீறின. ஆனால், அந்த பெட்டிக்குள் நான் வைத்த பாம்படங்கள் இல்லை. உடனே, பெட்டியை பூட்டி விட்டேன். தொடர்ந்து, என்னிடம் பாம்படங்களை கொடுத்த குடிகாரர்களை பிடித்து, நீங்கள் கொடுத்த பாம்படங்கள் இரண்டும் என் கண்களுக்கு பாம்பாக தெரிகிறதே என்று கேட்டேன். அவர்களும் என்னுடன் வந்து, அந்த பெட்டியை திறந்து பார்த்தார்கள். அப்போதும் இரு நல்லப் பாம்புகள்தான் தெரிந்தன.

அப்போதுதான், அந்த பாம்படங்களை ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து பெற்றதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். சிறிதுநேரம் கழித்து, தங்களை நினைத்தபடி அதே பெட்டியை மீண்டும் மூன்றாவது முறையாகத் திறந்தேன். அப்போது பாம்புகளை காணவில்லை. நான் ஏற்கனவே வைத்த பாம்படம் இரண்டும் அப்படியே இருந்தன. உடனே, ஓட்டமும் நடையுமாக உங்களை பார்க்க வந்தேன்" என்று வியர்க்க விறுவிறுக்க நடந்த சம்பவங்களை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் வந்தவர்.

எதுவும் பேசாமல் இலேசாக புன்முறுவல் பூத்த அய்யா, அவருக்கு திருநாமம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில், முந்திரிக் கிணற்றுக்கு நீராடச் சென்ற உமய பார்வதியும், அவளது இரு குழந்தைகளும் வந்தனர்.

அவளிடம், அவளது இரு பாம்படங்களையும் கொடுத்தார் அய்யா.
அவளுக்கு அதை பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள். ஆனந்தத்தில் திக்குமுக்காடினாள்.

மகிழ்ச்சியோடு அந்த பாம்படங்களை வாங்கிக்கொண்டாள்.

அய்யாவின் முன்பு வைத்தே அதை தனது காதுகளில் அணிந்து கொண்டாள்.

அய்யா நின்றிருந்த இடத்தில், அவர் பாதம் பட்ட மண் சிறிது எடுத்து, அதை தனது சேலை முந்தியில் முடிந்து கொண்டாள்.

அய்யாவின் அருளாசி பெற்று மறுநாள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

பின்னாளில், இந்த உமய பார்வதியும், அவளது மூத்த மகனும் சொந்த ஊரான வேப்பங்காட்டில் அய்யாவின் பெயரால் ஒரு நிழற்குடையை நிறுவினார்கள். மேலும், அவளது மகன் அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டான். நாட்கள் செல்லச் செல்ல அவர்களது குடும்பத்தில் இருந்த வறுமை மாறி, அந்தக் குடும்பம் வளர்ச்சி பெற்றது.