இயேசு யாரை மாயக்காரர் என்கிறார்?

இயேசு யாரை மாயக்காரர் என்கிறார்?



பழங்கால கிரேக்க நாடகங்களில் நடிகர்கள் தாங்கள் எந்தெந்தப் பாத்திரங்களில் நடிக்கின்றார்களோ அவர்கள் சுபாவத்தை வெளிப்படுத்தும் பெரிய முகமூடிகளை தங்கள் முகத்திற்கு நேரே பிடித்திருப்பார்கள். அப்படிச் செய்வதால் அவர்கள் உண்மையான தோற்றமல்ல. அவர்கள் யாராய் நடிக்கின்றார்களோ அந்தப் பாத்திரத்தின் தோற்றமே வெளிப்படும். வேஷத்திற்கு ஏற்றவிதமாக முகமூடி மாறுபடும். இயேசுவும் மாயக்காரர் என்று கூறும்போது
இத்தகைய காரியத்தையே வெளிப்படுத்துகின்றார்.

இயேசு மாயக்காரர் என்று யாரை இத்தகைய கடினமான வார்த்தையால் அழைக்கின்றார்? அக்கால சமுதாயத்தால் கொடிய பாவிகளாக கருதப்பட்டவர்களையல்ல. சமுதாயத்தால் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்ட யூதமதத் தலைவர்களையே அழைக்கின்றார். இவர்களும் ஒருவிதத்தில் முகமூடி அணிந்தவர்களே. வெளியில் மற்றவர்களுடைய பார்வையில் தங்களை நல்லவர்களாகவும், பக்திமான்களாகவும், பரிசுத்தவான்களாகவும் காட்டி சமுதாயத்தில் புகழ்ச்சியை எதிர்பார்த்தவர்கள். ஆனால் உள்ளத்தால் அவர்கள் வாழ்வு மிகவும் அசுத்தமாக இருந்தது. அவர்கள் வாழ்வில் பெருமை, சுயநலம், பொறாமை, இச்சை, பணஆசை, மற்றவர்களை இழிவாக எண்ணுதல்,
வெறுப்பு போன்ற கொடிய பாவங்கள் குடிகொண்டிருந்தது.

உள்ளும் புறம்பும் ஒன்றாய் இருப்பதே உத்தம வாழ்வு. ஆனால் உள்ளொரு வாழ்வும் வெளியில் மற்றவர்களுடைய பார்வைக்கொரு வாழ்வும் நாம் வாழ்வோமானால் இருதயத்தைப் பார்க்கிற தேவன் நம் அந்தரங்க வாழ்வை அம்பலப்படுத்துவார். எனவே உள்ளத்தால் பாவத்தில் ஜீவித்துக் கொண்டு வெளியில் பரிசுத்தராக நடிப்பது மிகவும் ஆபத்தானது. அதைத் தொடர்ந்தும் செய்துகொண்டிருக்க இயலாது. எனவே இதனை வாசிக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒருமுறை ஆராய்ந்து பாருங்கள். வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு ஆராதனைக்குப் போகும்போது மட்டும் முகமூடி அணிந்துவிட்டு மற்ற நாட்களில் மற்றொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? இன்றே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். உங்கள் மறைவான பாவங்களை அறிக்கை செய்து அனைத்து சூழ்நிலைகளிலும் ஒரேவிதமான உத்தம வாழ்வு வாழ தீர்மானம் எடுங்கள். அதையும் காலம் தாழ்த்தாமல் இப்போதே செய்யுங்கள்.