பொக்கிஷங்களை எங்கே சேகரிக்கலாம்?

பொக்கிஷங்களை எங்கே சேகரிக்கலாம்?




நம்மில் அநேகர் ஏதோவொரு வகையில், ஏதோவொரு அளவில் சேர்த்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொக்கிஷம் அல்லது ஐஸ்வர்யம் அல்லது செல்வம் தேவையற்றது என்று இயேசு கூறிவிடவில்லை. சேர்த்து வைப்பது தவறு இல்லை. ஆனால் நாம் எங்கே சேர்த்து வைக்க வேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். வங்கி இரண்டு இடங்களில் உண்டு. ஒன்று பூமி. மற்றொன்று பரலோகம். நமது தேர்ந்தெடுப்பு என்ன?

பூமியிலே நம் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம் என்று ஆண்டவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். பொருள்கள் நமக்கு அவசியமே. நம் தேவைகளைச் சந்திக்கப் பணமும் அவசியமே.

ஆனால், பண ஆசை, பொருளாசைக் கொண்டு சுயநலத்தோடு நம்மைச் சுற்றியிருக்கும் தேவைகளை மறந்து பூமியிலே சேகரித்து வைப்பதை முதலாவது நாம் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பொருளாசை நம்மை தீமைக்கு நேராகக் கொண்டு போகவே செய்கிறது. இறுதியில் நமக்கு ஐசுவர்யத்தைத் தந்தவரை மறந்து ஐசுவர்யத்தின் மேலேயே நம்பிக்கையை வைத்து விடுவோம் என்பதில் சந்தேகமேயில்லை. 

இதுவே நமக்கு நேரிடுகின்ற முதல் தீமையாகிறது. ஓர் நாள் பூச்சியும் துருவும், திருடரும், கொள்ளைக்காரர்களும், வியாதிகளும் நம் ஐசுவர்யத்தை விழுங்கிவிடும் போது நாம் நிலைகுலைந்து நிச்சயம் சாய்ந்து விடுவோம்.

"ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல" (லூக் 12:15) என்று ஆண்டவர்தாம் கூறினாரே.

"அப்படியானால் பரலோகில் ஐசுவர்யத்தை சேகரிப்பது எப்படி? மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபனுக்கு இயேசு சொன்ன விடையே உகந்த பதிலாகும். "நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், உடனே போய் உனக்கு உண்டாகியிருக்கிறவைகளை விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாகியிருக்கும்." (மத் 19:21) என்றார்.

பூமியிலே நாம் அவருடைய நாம மகிமைக்காக நற்கிரியைகள், தருமங்கள், தியாகங்கள் செய்யும் போது நிச்சயமாக பூமியின் எல்லையைக் கடந்து நாம் பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கின்றோம். ஆகவே, பவுல் கூறியபடி நிலையற்ற ஐசுவர்யத்தில் நம்பிக்கை வைக்காமல் சம்பூர்ணமாய் அள்ளிக் கொடுக்கிற தேவன் பெயரில் நம்பிக்கை வைத்து, நித்திய ஜீவனுக்கேற்ற பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வைத்தால் அங்கே அது பாதுகாப்பாகவும், நமக்கு உதவுவதாகவும் இருக்கும்.