பக்திக்கு வழிகாட்டும் பெரிய புராணம்

பக்திக்கு வழிகாட்டும் பெரிய புராணம்



தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புக்கள் பல வகைப்படும். உலக மொழிகள் எதிலும் இன்று வரை காண முடியாத பொருள் அதிகாரம் பற்றிப் பேசும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ள தொல்காப்பியம் இன்றும் நமக்குக் கிடைக்கும் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூலாகும். தனித்தன்மை பெற்றுத் தொல்காப்பியம் விளங்குவது போலவே, சமய இலக்கியம் என்ற பகுதியும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. பக்திப் பாடல்கள் என்ற தொகுப்பைப் பெற்றுள்ள சிறப்பு உலக மொழிகள் அனைத்திலும் தமிழுக்கு கிடைத்த வாய்ப்புகள் போல வேறு எந்த மொழிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அளவு கொண்டு கணக்கிட்டால் கூடத் தமிழ் மொழியில் உள்ள பக்திப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழுக்கு அடுத்த இடத்தை பெறுவது வடமொழியன்று. ஹீப்ரு மொழியே என்று மொழி வல்லுநர்கள் கூறுகின்றனர். சங்க காலந்தொட்டு இடையீடு இன்றி, வளர்ந்த தமிழர் வாழ்வும், இலக்கிய வளர்ச்சியும் களப்பிரியர் இடையீட்டால் தடைப்பட்டன. மறுபடியும் அந்த வளர்ச்சியும் அதன் போக்கும் முற்றிலும் மாறி புதிய முறையில் தமிழ் இலக்கியம் வளரத் தொடங்கிற்று.

இவ்வாறு தோன்றிய புதிய வாழ்க்கைமுறை, குறிக்கோள்கள், பக்தி இயக்க காலம் என்று கூறலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை உள்ள 5 நூற்றாண்டு காலத்தை பக்தி இயக்கக் காலம் என்று கூறலாம். இந்தக் காலத்தின் தொடக்கத்தில் திருஞான சம்பந்தனார் முதன் முதலாகத் தேவாரம் பாடத் தொடங்கினார்.12 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ஆழ்வார்களும் தோன்றி வைணவ சமயத்தை வளர்த்தனர்.

7-ம் நூற்றாண்டில் பல்லவ அரசு தோன்றியது. பல்லவர்கள் தொடக்கக் காலத்தில் தமிழினிடத்து எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. வட மொழியினையே ஆதரித்தனர். வேத வழக்கொடுபட்டவர்கள் வேதங் கூறும் வேள்விகளையே செய்தனர். தமிழகம் வந்து குடியேறிய வைதிகர்களின் செல்வாக்கு ஓங்கி நின்றமையின் காரணத்தால் சைவத்திற்க்கும், தமிழுக்கும் ஊறு விளைய ஏதுவாயிற்று.

புற சமயமான சைனம், பௌத்துவத்தால் இடையூறுகள் நேர்ந்தன. இந்த வைதிகர், சமணர்கள், சைனர் [களப்பிரர் மரபினர்] பௌத்தர் என்பர் அனைவரும் தமிழையும், தமிழ் நாகரிகத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஏற்காதவர்கள். இந்நிலையில் தோன்றியவர் திருஞான சம்பந்தர். புறச் சமய எதிரிகளை வென்றதுடன் அகச் சமயமாகிய வைதிகத்தையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

சைவ சமய இலக்கியங்களில் மணிமுடியாக விளங்குகின்ற பெரிய புராணத்தைத் தோன்றிய காலச் சூழ்நிலை, சைவ சமய வளர்ச்சியில் இப்பெரும் நூலின் இடம், இலக்கிய வரிசையில் காப்பிய இடத்தினை பெறுகிறது. மாபெரும் புரட்சியைச் செய்து தமிழ் மொழியை நிலை நிறுத்தியவர் திருஞான சம்பந்தரே என்ற பேருண்மையை நமக்கு காட்டியவர் சேக்கிழார்.

தேவாரம் முதலியவற்றில் உள்ளந் தோய்ந்து இருந்த சேக்கிழார், '' நாயன்மார்களின் வரலாறு மூலம் மக்களைத் தட்டி எழுப்பி, வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கும்'' என்ற ஒரு முடிவுக்கு வந்தார். நம்பியாரூரார் பாடிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே பாட வேண்டும். முடிபும் அதை ஒட்டி வந்ததேயாகும். அதன் பயனாகத் தோன்றியது இந்தப் பெரிய புராணம்.

சென்னை நகரத்திலிருந்து பதினைந்து மைல் கல் தூரத்திலுள்ள குன்றத்தூர் சிறிய ஊர். மிகப் பழைய இந்த ஊரில் கல்வி கேள்விகளில் சிறந்த வேளாளப் பிரிவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்தார் சேக்கிழார். [ இவரின் காலம் கி.பி 1133 -1180 வரையிலாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.] சேக்கிழார் என்பது அவரின் மரபு பெயராகும். அவரின் இயற்பெயர் 'அருள்மொழித்தேவர்' என்பதாகும்.

அந்தக் காலத்தில் சோழ மண்டலத்தின் அதிபதியாயிருந்த அநபாயச் சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாரின் கல்வி அறிவு, ஒழுக்கங்களைக் கேள்விப்பட்டு, அவரைத் தனது தலைநகராகிய பழையாறைக்கு வரவழைத்து, தமக்கு முதல் மந்திரியாக நியமித்து, உத்தம சோழ பல்லவர் என்ற பட்டமும் கொடுத்து சிறப்பித்தான். பழையாறைக்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்து இறைவன் பேரில் ஈடுபாடு கொண்ட சேக்கிழார் பிற்காலத்தில் தன் சொந்த ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என்னும் ஒரு கோயிலைக் கட்டி வைத்தார்.

அந்தக் காலத்தில் வெளிவந்த தமிழ்க் காப்பியமாகிய சீவகசிந்தாமணி தமிழ் உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சோழ மன்னன் அநபாயனும் அந்தக் காப்பியத்தை இரசித்துப் படித்ததைக் கண்ட மந்திரி சேக்கிழார், சைவனாகிய தமது அரசர் சமண இலக்கியமான சீவகசிந்தாமணியில் ஈடுபாடு கொண்டிருப்பது மிகவும் கவலை தந்தது. " அரசே, சைவ சமயத்தவராகிய தங்கள் வேதத்தையும் இறைவனையும் பழிக்கும் சமண இலக்கியத்தைப் படிப்பது பொருத்தமல்லவே " என்று சொன்னார்.

அநபாயனுக்கு இது தெரியாததல்ல. "சமணர்கள் செய்தது போல நமது சைவர்கள் ஒன்றும் செய்யவில்லையே, அப்படியான சிவ சரிதம் ஏதாவது உண்டா?" என்று கேட்டான்.

சிவனது பெருமையைப் பேசும் தொண்டர்களைப் பற்றி தேவார நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தில் அறுபத்து மூன்று தனி அடியார்களைப் பற்றியும் மற்றும் சில தொகை அடியார்களைப் பற்றியும் எடுத்து கூறினார்.

சிவன் நாமத்தை மட்டும் மறவாது வழிப்பட்டு வந்தபோதும், அச்சமயம் சோழ மண்டலத்தில் சமணம், பௌத்தம், சைவம் போன்ற சமயங்கள் சமய பூசல்கள் காரணமாக ஒன்றுக் கொன்று போட்டி போட்டுக் கொண்டு செல்வாக்கை தேட ஆரம்பித்தன.

இருண்ட காலத்தில் போய்க்கொண்டு இருந்த சைவ சமயத்தைக் காப்பாற்றி கரையேற்ற எண்ணங் கொண்ட சேக்கிழார், முதலில் சமய நூல்களில் மனதைப் பறிகொடுத்த மன்னரையும், மக்களையும் காப்பாற்ற எண்ணங் கொண்டார். தனது அறிவாற்றல் மூலம் சைவ சமயத்தின் சிறப்பியல்களையும், அது தன்னகத்தே கொண்டுள்ள அறிய கருத்துக்களையும், கருத்து சொறிந்த நூல்களளையும், சிவநெறி நின்ற சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கதை உருவில் மிகச்சுவைபடக் கூறி, மன்னரையும், மக்களையும் தன் வசமாக்கினர்.

மனுநீதி கண்ட சோழர், அமர் நீதிநாயனார், திருநாவுக்கரசு, திருஞான சம்பந்தர், சுந்தரர் போன்ற சிவனடியார் வாழ்க்கை வரலாறு எல்லாம் சேக்கிழார் வாயிலாக கேட்டு களிப்படைந்த அனபாய சோழர் சேக்கிழாரிடம் " அமைச்சரே, சைவமும், தமிழும் என்றும் தழைத்தோங்க கூடிய கருத்துக்களை எல்லாம் ஒன்றாக்கி, என்றும் அழியாப் புகழ் தரக்கூடிய புராணம் ஒன்றினை செய்தருள வேண்டும்" என விழைந்தான்.

"அந்த அற்புதமான அடியார் சரிதங்களை எல்லாம் இலக்கிய நயம்பட ஒரு பெருங்காப்பியமாக அருளினால் தமிழ் மக்கள் சிறப்பாகச் சைவ நன்மக்கள், படித்து ரசிக்க வாய்ப்பளிக்கும். இலக்கிய விற்பன்னராகிய தாங்களே அதைச் செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டான்.

அருள்மொழித் தேவராகிய சேக்கிழார் மகிழ்ந்து அந்த அன்பு கட்டளையினை ஏற்றுக் கொண்டு "பெரிய புராணம்" என்னும் பெருங்காப்பியத்தைப் பாடினார்.

இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று, அவனாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றுச் சுந்தரர் பாடிய பாடலிலேயே குறுகிய வட்டத்தை விட்டு அனைத்துலத்தையும் அணைத்துக் கொள்ளும் பார்வை இருப்பதைச் சேக்கிழார் அறிந்து கொள்கிறார். சேக்கிழாருக்கு கூட அடியெடுத்துக் தந்த இறைவன் '' உலகெலாம்'' என்றுதான் அடியெடுத்துத் தந்தான். அதில் சைவர்கள் என்றில்லாமல் உலக முழுவதிலும் எல்லாக் காலத்திலும் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் மக்கள் இலக்கணத்தை வகுத்துள்ளது

சிதம்பரம் வந்து , கனகசபையில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமானை வணங்கி நின்று சிந்தித்த போது, இறைவனே முன் வந்து " உலகெலாம் '' என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்க அருளினார்.

அதன்படியே,
உலகெலாம் உணர்ந்து ஓதற்க்கு அரியவன்... '
நீர்மலி வேணியன் அழகில் சோதியன்
அம்பலத்து இடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

-என்ற காப்புச் செய்யுளுடன் தொடங்கி,

''என்று மின்பம் பெருகு மியல்பினால்
ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.''

-என்ற வார்த்தையுடன் சிதம்பரம் பொற்றாமரை வாவிக்குப் பக்கத்திலுள்ள ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து, அற்புதமான தமது பெரிய புராணத்தைப் பாடி முடித்தார்.

சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து பெரிய புராணக் காப்பியம் பாடி முடித்தவுடன் சோழ மகாராஜா தாமே நேரில் சென்று தமது பட்டத்து யானையில் சேக்கிழாரையும் பெரிய புராணக் காப்பிய ஏட்டையும் அமர்த்தி, புலவர் பின்னால் தாம் உட்கார்ந்து சாமரம் வீசி ஊர்வலம் வந்தான். மந்திரி பதவி பெற்றிருந்த சேக்கிழார், பதவியைத் துறந்து, சிதம்பரத்தில் தானே வீற்றிருந்து இறைபணி செய்து வந்தார். அநபாயச் சோழன் அவருடைய பாராட்டி "தொண்டை சீர் பரவுவார்''  என்ற பட்டம் சூட்டி வாழ்த்தினான். இவரின் பெரும் முயற்சியால் நாம் அறுபத்திரண்டு நாயன்மார்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது.

சேக்கிழார் சிவநேயச் செல்வர். சிவ திருவடிகளின் நிழலே சரண் எனப் புகுந்தவர். சிவனின் இன்னருளிலேயே தோய்ந்து திளைத்தவர். அந்த நிலை தளராத முயற்சியால் பலருக்கு கிட்டுவது என்றாலும், சேக்கிழார் இந்த நிலைக்கு மேலே சென்று விடுகிறார். காணும் பொருளிலே சிவத்தை காணும் உன்னத நிலையை அடைகிறார். அந்த உயர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவருடைய உள்ளம் முகிழ்ந்திருந்த போதே பெரிய புராணம் மலர்ந்துள்ளது. அதனால்தான் அவ்வளவு பெரிய உள்ளங்களை எல்லாம் சேக்கிழாரால் கவிதைகளில் கொண்டு வர முடிந்தது. இதனை பெரிய புராணம் இலை மறை கனியாகக் காட்டுகிறது.

"இறைவன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடுக என்றமையால்தான் யான் பாடுகிறேன்''
-என்ற கருத்தில்...

"அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும்
தெருளில் நீர் து செப்புதற்கு ஆன் எனின்
வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல்வாம் அன்றே"
-என்று கூறுவது இவர் அருள்வழி நின்று இதனைப் பாடலுற்றார் என்பதற்கு அகச் சான்றாகும்.

இளம் பிராயம் முதல் சிவபிரானிடம் மாறாத பக்தியும், தணியாத பாசமும் கொண்டு சிவ நேசராக விளங்கிய சேக்கிழார் கல்வி கேள்விகளிலும் தமிழ் இலக்கியங்களிலும், செய்யுள் வடிப்பதிலும் சமயப் பேரறிஞர்களும் பாராட்டி போற்றும் அளவுக்கு தன்னிகரற்று விளங்கினார். சேக்கிழார் புதுவழியை வகுத்துக் கொண்டு, தொண்டு என்ற பண்பைக் காப்பியப் பொருளாக்கித் தொண்டர்கள், பக்தர்கள் என்பவர்கள் தூய பக்தி மனப்பான்மையுடன் வாழ்க்கை நடத்தும் போது எப்படி எல்லாம் செயல்படுவார்கள் என்பதை விளக்கினார். மிக உயர்ந்த இந்தக் கருத்து எல்லாம் மக்களிடமும் சென்று பரவவேண்டும் என்று கருதினார் சேக்கிழார். எனவே அவருடைய பெரிய புராணம் அனைத்து உலகத்தையும் தழுவும் பண்பு கொண்டு அமைந்து விட்டது.

"கற்பனை கடந்த சோதி, திருசிற்றம் போற்றி போற்றி" என்று தெய்வ மணம் கமழ பாடிய சேக்கிழாரை தொடர்ந்து பார்க்கலாம்.
இனி சில பெரிய புராண பாடல்களை பார்ப்போம்:
பன்னிரெண்டாம் திருமுறையில் :-

"வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை
விளங்கப் பூதபரம்பரை பொலியப் புனித வாய்
மலர்ந்தழுத சீதவள வயற்புலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக் கொண்டு திருதொண்டு பரவுவாம்"
- என்கிறார்.

வேத நெறிகள் தழைக்கவும், சைவ சித்தாந்த சமயம் விளங்கவும், பாண்டியன் வெப்ப நோயை நீக்கி, சமணரை வென்று சைவ சமயத் தொண்டினை பரவச் செய்ய அவதாரம் புரிந்தார் என்பதையும் சித்தரிக்கிறார்.

திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் இறைவனை நேரே கண்டு பாடியதுடன் மக்கள் துயர் துடைக்கும் பணியில் முழு மனதாக ஈடுபட்டனர் என்பதையும் சேக்கிழார் விளக்குகிறார். நாவரசரும், ஞான சம்பந்தரும் திருவீழிமிழிலைக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில்,

"மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி,
விண்ணவர்ககும் சிறப்பியல் வரும் பூசை யாற்றா
மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்குங்
கவலை வருமோ?"

-என்று கருதினார்களாம். இவ்வாறு நினைத்த அவர்கள் மக்களைப் பார்த்து ''நீங்கள் இறைவனை வழிபடுங்கள் விரைவில் வளம் பெருகும்'' என்று கூறாது, பஞ்சத்தால் மக்கள் படும் துயரத்தைக் கண்டு மனம் வருந்தி அன்றிரவு துயில்கையில், கனவில் இறைவன்,

"உலகியல் நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசி நோய் உமையடை யாதெனினும் உம்பால்
நிலவு சிவநெறி நித்தம் ஒரோர் காடு நீடும்
லகுமணி பீடத்துக் குணக்கும் மேற்கும் யாம்
அளித்தோம் உமக்கு"

-என்று கூறி அவ்வாறே காசும் அளித்தான்.

இறைவன் தந்த பொற்காசை மாற்றி பசித்தோர் அனைவரும் வந்து உண்ணலாம் என்று அறிவித்தனர்.

'' நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும்
உண்பதற்கு வருக என்று
தீதில் பறை நிகழ்வித்து.....''
அழைத்தார்கள்.

அவர்கள் கூறிய சொற்கள் ஊன்றி கவனிக்க வேண்டியவைகள். ' இறைவனால் அருள்செய்யப் பெற்ற உயிர்கள்' என்று பொருள். இறைவனால் படைக்கப் பெற்ற எல்லா உயிர்களுக்கும் வேறுபாடு காட்டாமல் அவன் அருள் செய்கிறான். எனவே அனைவருக்கும் வேறுபாடின்றி உணவு தந்தார்கள் என்ற நுண்ணிய கருத்தை அழகாக நுணுக்கமாவும் தருகிறார் சேக்கிழார்.

வனவேடரான கண்ணப்பரது செருப்படியை இறைவன் ஏற்றுக் கருணை புரிந்தது போல, சாக்கிய நாயனார் ஒப்பற்ற அன்பினால் கல்லெறிந்து வழி பட்டதையும் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை சேக்கிழார் தமது பாடல் மூலம்,

'கல்லாலே எறிந்தததும் அன்பானபடி காணில்
வில்வேடர் செருப்படியும் திருமுடியின்மே வியுறால்,
நல்லார் மற்றவர் செய்கை அன்பாலே நயந்ததனை
அல்லாதார் கல்லென்பார் அரனார்க் கல்பவராமல் ..."

-என்று பாடுகிறார்.

திருத்தொண்டர் தொகை எனும் வரலாற்று நூலைத் தரவும், மாதவம் செய்து தென் திசை வாழவும்,
சைவம் தழைக்கவும் உலகுக்கு சுந்தரரை இறைவன் அனுப்பினார் என்பதை,

' மாதவஞ் செய்து தென் திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டர் தொகை தரப்போதுவராவர் "

-என்று சுந்திரரின் அவதாரத்தினை குறிக்கிறார்.

"மானிடராகப் பிறந்தால் இறைவனிடம் அன்பு கொண்டு என்றும் மறவாமல் இருக்க வேண்டும்" என்பதை சேக்கிழார்,

"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகிறார் பிறவாமை வேண்டும்,
மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
என்றும் மறவாமை வேண்டும்,
இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி !
நீடும் போதுன் அடியின் கீழ் இருக்க " [திருநாட்டுச் சிறப்பு]
என்கிறார்.

- கவிதையை அழகு படுத்துவது உவமையணி என்றாலும் கூட , அந்த உவமையணியைப் போல் கவிஞனின் உள்ளத்தினைப் புலப்படுத்துவது வேறொன்றுமில்லை. கவிஞன் தான் விளக்கப் புகுந்த பொருளை தான் அறிந்தும் தனக்கு மிகப் பிடித்த அல்லது பழக்கமான பொருளைக் கொண்டு விளக்கிக் காட்ட முயல்வான். அப்போது அவனை அறியாமல் அவன் உள்ளத்தோடு இணைந்து விட்டவை உவமை வாயிலாக வெளிப்படும்.

சேக்கிழாரும் அங்கும் இங்குமாக அவர் பயன்படுத்திய உவமைகளும், அவர் உள்ளப் பாங்கைக் காட்டுவதாக அமைகிறது. நெற்பயிர்கள் தம்மை ஒப்பாரும் மிக்காரும் இன்றிச் கருவுற்றி, முதிர்ந்து பசலைக் கொண்டு, சுருள் விரிந்து இலர்கின்றன். சேக்கிழார் மனதில் நெற்கதிர்களைப் போலச் சிந்தை மலரும் சிவனடியார்களின் நினைவு மலர்கிறது.

"சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதம் வெண்மை உண்மைக் கருவினும் வளத்த வாகிச்
சூல்முபிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கண்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்கலெல்லாம் " [திருநாட்டுச் சிறப்பு.]

அடுத்து முற்றிய அந்த நெற்கதிர்களைப் பார்க்கிறார். அவை தலை தாழ்த்தி வணங்குவன போல் காணப்படுகின்றன. அவை தன் முனைப்பற்றுப் பணிவோடு நிலை கண்டவுடன் அவர் உள்ளத்தே ஒரு கற்பனை விரிகிறது.

ஞான சம்பந்தரும் அப்பரும்சந்திக்கும் போது எப்படி இருப்பார்கள், சேரமான் பெருமானும் சுந்திர மூர்த்தி நாயனாரும் சந்தித்த போது எப்படி இருந்திருப்பார்கள் என்ற கற்பனை அது.

தன்முனைப்பற்று இறையன்பிலேயே தினைத்திருந்த அவர்களும் இப்படித்தான் வணங்கி இருப்பார்கள் என்ற தெளிவு ஏற்படுகிறது. அந்தத் தெளிவில், முதிர்ந்த கதிர்களின் வணக்கத்துத் தாம் சிந்தையில் கண்ட காட்சியையே உவமையாக்கி விடுகிறார்.

"பத்தியின் பால ராசிப் பரமனுக் காளாம் அன்பர்
தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்த நீள்பத்தியின் பால் முதிர் தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் "    [திருநாட்டு சிறப்பு]

மற்றொரு சிந்தனை. காவிரியில் நீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. கரையோரத்தில் இருந்த மரங்கள் சொரிந்த மணமுள்ள மலர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு செல்கிறது. இவ்வாறு செல்கின்ற காட்சி, கரை ஓரத்தில் இருக்கும் சிவன் கோயில்களில் காவேரியானது மலரும், நீரும் கொண்டு அஞ்சலி செய்வது போல இருக்கிறது. இச்செய்கையால், மலரும் நீரும் கொண்டு சிவபெருமானை வழிபடும் அன்பருக்கு காவேரியாறு நிகர் என்று கூறுகிறார் சேக்கிழார்.

"வம்பு வாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை யெண்ணிலி சிவாலயத்
தெம்பி ரானை யிறைஞ்சலின் ஈரம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஓக்குமால். "

கவிதை தோன்றிய நாள் முதற் கொண்டு, கவிஞர்களின் கற்பனைக்கு வளம் தந்து இன்பம் தருவன நிலவும் பெண்ணும். இந்த இரண்டையும் பாடாத கவிஞர் இருப்பாரா என்பது ஐயத்திற்குரியது. இல்லை என்றே கூறலாம். அந்த இரண்டைப் பற்றியும் பாடும் போது சேக்கிழார் தனித்து நிற்கிறார். அத்தோடு மட்டுமின்றி அவற்றைப் பாடும் போது சேக்கிழார் தம் உள்ளத்தில் கனிந்த இறையன்பைக் காட்டுகிறார்.

வானிலே நிலா உலா வந்து கொண்டிள்ளது. அதனுடைய தூய்மையும் இன்பமும் குளிர்ச்சியும் மண்ணுயிர்களை எல்லாம் ஓம்புகின்றன. நிலாவின் இயல்புகள் சேக்கிழாருக்குத் திருநீற்றின் நினைவைக் கொண்டு வருகிறது. தூய்மை, இன்பம், தன்மை ஆகிய மூன்றும் திருநீற்றிற்கும் உரிய இயல்புகள் தாமே ?

அந்த சிறப்பான பாடல் :

" தோற்றும் மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய்
இற்றி அண்டமெலாம் பரந்தண்ணல் வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா. "  [திருத்தாட்தொண்ட புராணம்]

காதல் சுவையினையும் இறைவன் திருவருள் நயத்துடன் உரைக்கிறார். காதலியைக் கண்ட அளவிலே, காதலன் உள்ளத்தில் எழும் இன்ப உணர்ச்சிகளும் அவள் அழகு தோற்றமும், கவிஞர்களுக்கு இடையறாத கற்பனை ஊற்றாய் விளங்குகிறது பரவையாரை முதன் முதலில் பார்த்தவுடன் சுந்தரர் உள்ளத்திலும் அத்தகைய இன்ப அலைகள் எழுந்து ஆர்ப்பரிக்கின்றன. பரவையாரின் எழில் சுந்தரரை மயக்குகிறது. இப்படியும் ஒரு பெண்ணெழில் உண்டா என வியக்கிறார்.

"கற்பக் தருவின் பூங்கொம்போ ?
காதல் கடவுளாகிய காமனுடைய பெரு வாழ்வே இவ்வெழில்
வடிவமாக வந்து நிற்கின்றதோ ?
புயல், வில், குவளை, பவளமலர், நிலா முதலிய அனைத்தும்
ஒரு சேர பூத்த மணமிக்க கொடியோ ?

-என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடுகின்றன. அந்த கற்பனை எல்லா கவிஞர்களுக்கும் ஏற்படும் நிலையில்தான் சேக்கிழாரும் நிற்கிறார். ஆனாலும், வாதம் செவ்விய உள்ளத்தையும் நுண்மையும் காணலாம். அது "சிவனுடைய அருளோ? " என்பதுதான் அக்கேள்வி.

சுந்தரின் மனதில் ஏற்படும் இந்த வியப்பை எல்லாம் இப்படி கவிதையாக வடிக்கிறார்.

" கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ யாதொவென்று அதிசயித்தார் " [தடுத்தாட் கொண்ட புராணம்]

இவ்வாறு காண்கிற காட்சிகளில் மட்டுமன்றி, நடக்கின்ற செயல்களிலும் இறைவனின் திருவருளையே காணும் பக்குவ உள்ளம் சேக்கிழாருடையது என்பதற்கு பெரிய புராணம் ஒரு சான்று.

நகைச்சுவை வைத்துப் பாடுவது எளிதாகும்.ஆனால் அதனுள்ளும் ஆழமான கருத்தமையப் பாடுவது கடினம். ஒற்றியூரில் புற்றிடங் கொண்டாரைப் பணிந்து சங்கிலியை மணம் முடித்து தருமாறு சுந்தரர் வேண்டுகிறார் என்று சேக்கிழார் நகைச்சுவை பொருந்த ஒரு பாடலை அமைத்துள்ளார்.

''மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீர் முடிவின் கண்
கங்கை ஒருபால் கரந்தருளும் காதலுடையீர்; அடியேனுக்கு
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் தொடை அவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீரும்."

-என்ற இந்தப் பாடல் முதல் இரண்டடிகளில் நகைச்சுவை நிரம்பி மிளிர்கின்றது.

இறைவன் உதவி கொண்டு திருவாரூரில் பரவை மணந்து இன்பமாக
வாழும் சுந்தரர் மறுபடியும் ஒரு பெண்ணைத் தர வேண்டுமென்று கேட்டால் சற்று அதிகமானதுதான். அவ்வாறு கேட்க முடியாமல் செய்ய ஒரே வழி "நான் கேட்டது ஒருபுறம் இருக்கட்டும், நீயே இரண்டாவது மனைவி ஒருத்தியை மறைவாய் தலையில் வைத்துள்ளாயே!" என்று கூறுவதுதான். வரப் போகும் வினாவை எதிர்பார்த்து அதற்கும் சேர்த்து விடை கூறுவது போல "பாகத்தில் ஒருத்தியை வைத்து போதாதென்று தலையிலும் ஒருத்தியை மறைத்து வைத்துள்ளவரே!' என்றே விளிப்பது கருத்துடை அடைமொழி ஆகும். அதை விடவும் அதில் ஒரு சிறப்பு உள்ளது. "கரந்தருளும் காதல் உடையீர்!" என்று கூறும் பொழுதே "நான் உம்மைப் போல் மறைவாக வைத்து வாழ விரும்பவில்லை. ஊரறிய மணஞ் செய்து கொள்ளவே விரும்புகிறேன்" என்ற கருத்தும் தொக்கி நிற்கக் காண்கிறோம்.

அழுகை சுவையும் ஒரு பாடலில் காண்கிறோம். இளிவு, இழவு, அசைவு, வறுமை என்ற காரணங்களால் இச்சுவை பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

எளியார் முறையிட கூடிய ஒரே இடம் இறைவன். திரு மருகல் பெண்ணின் அழுகை இது. தனிப்பட்ட ஒரு பெண் தன் காதலனுடன் 'உடன் போக்கு மேவ, இடைவழியில் அவன் அரவு தீண்டி இறந்துபட, புலம்பி அழுகின்றாள். இறப்பு என்பது நீக்க முடியாதது என்பதை அப் பேதைப் பெண் நன்கறிவாள். ஆனாலும் திருமருகலில் உள்ள இறைவனிடம் தன் துயரை வெளியிடுகிறாள். விண்ணப்பம் செய்யும் முறையில் அவள் அழுகை வெளிப்படுகிறது.

"அடியாராம் உமையவர் தம் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே! செங்கண்
நெடியோனும் நான்முகனும் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலா! வெந்து
பொடியான காமன் உயிர் ரதிவேண்டாப்
புரிந்தளித்த புண்ணியனே! பொங்கர்வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின் மருகல் பெருமானே! காவாய் என்றும்..!

வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேல் சீறி
வருங்காலன் பெருங்கால் வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரியகோலம்
சிதைந்துருள உதைத்தருளும் செய்ய தாளா!
இந்தவிடக் கொடுவேகம் நீங்குமாறும்
யான் டுக்கண் குழிநின்றும் ஏறுமாறும்
அந்திமதிக் குழவி வளர் செய்யவேணி
அணிமருகல் பெருமானே! அருளாய்"

-என்ற அடிகளில் தன் வாழ்வு பாழாகி விட்டதற்கு அப்பெண் மனம் உருகிக் கதறுகின்றாள். ஆனால் தன்னலத்தின் அடிப்படையில் தோன்றிய அழுகையாயினும் சேக்கிழார் கையில் அந்த அழுகை புதியதோர் வடிவு எடுக்கின்றது.

காணும் காட்சிகளிலும் நடக்கும் செயல்களிலும் இறைவனின் பேரருளைக் கண்ட சேக்கிழார், தீயதை நெஞ்சினால் நினைக்கவும் பெறாத சான்றோர். அடியவர்களின் கதைகளைப் பாடும் நூலில் அமங்கலமாகச் சொற்களை போடமல் மங்கலச் சொற்களாலேயே தாம் சொல்ல வந்ததைச் சேக்கிழார், முத்தநாதன் மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சித்துக் கொல்ல எண்ணித் திருக்கோவலூர் சேர்ந்ததை,

"அற்றத்தில் வெல்வானாச் செப்பரு நிலைமை
எண்ணித் திருகோவலூரிற் சேர்வான் "

-என்றே சேக்கிழார் குறிப்பிடுவதுடன் அவன் தான் எண்ணியதை முடித்தவுடன் தான் முன் நினைந்த அப்பரிசே என்றே குறிப்பிடுகிறார். அத்துடன் பரத்தையர் குலத்தைக் கூடப் பண்புடன் பதியிலார் குலம்"என்றே தம் புராணத்தில் சொல்லியுள்ளார்.

சேக்கிழார் சிவபெருமானிடம் இடையறாத அன்பு பூண்டவர். அதே போல் சிவத்தொண்டர்களிடம் வற்றாத அன்பு பொங்கும் நெஞ்சினர். அன்பே உருவாக, அருளே உயிராய் இயங்கும் சான்றோர். நடக்கின்ற செயல்களில் எல்லாம் இவ்வாறு இறைவன் திருவருளையே காணும் சேக்கிழார், செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அவனை நினைந்து பணித்திருக்கிறார். அவரின் ஒரு பாடல் இதனைக் காட்டுகிறது.

கம்பர் காப்பிய நாயகன் ஈடு இணையற்ற மன்னன். ஒருத்தியுடன் வாழ்வதே இன்பம் என்று நினைப்பவன். தந்தை மாறுபட்ட வாழ்வை நடத்தியவன். எனவே அவனுடைய நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெறுகிறது. புலனடக்கம், நல்லொழுக்கம் என்பவற்றின் உறைவிடமாய், அறத்தின் மூர்த்தியாய், ஒருவன் தோன்றப் போகும் நாட்டைக் கூற வருகின்றான் கவிஞன். முதற்பாடல் அவனுடைய காப்பிய தலைவன் பண்பாட்டைக் கூறுவது போல அமைந்துள்ளதைக் காணலாம்.

"ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காக அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை நாட்டணி கூறுவாம்"

-என்று தொடங்கும் கம்பனின் பாடலில் தன் காப்பியத்தின் உள்ளீடு நுண்மையாக கூறுகிறது.

இதே போன்று சேக்கிழாரும் தம் காப்பியத்தின் முதற் பாடலில் கயிலை மலையை வருணிக்க புகுகின்றார்.

"பொன்னின் வெண்திரு நீறுபிணைத்தெனத்
தன்னை யார்க்கும் அறிவரி யான் என்றும்
மன்னி வாழ் கயிலைத்திரு மாமலை"

-என்ற இப்பாடலில் தன்னை யாரும் அறிவரியானுடைய சிறப்புதனை கூறும் காப்பியம் என்பதை நுண்மையாக அறியுமாறு செய்கின்றார்.

" நின்றாலும் ருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் மைத்தாலும்
மன்றாடு மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் தொண்டராங் குணமிக்கார் "

-இவை அனைத்தும் ஒரு சேர பார்க்கும் மகா வித்துவான் மீனாட்சி சுந்திரம் பிள்ளை,

" பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ "
' தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம் '
' சிவ மணக்குஞ் செய்யுளெலாம்'

- என்கிறார்

''அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிய விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே ''

- என்று பாடிய தாயுமானவரின் பாடலுக்கு ஏற்ப தனது வாழ்நாள் அனைத்தும், தமிழும் வளர, உலகில் சிவநெறி தழைத்தோங்க, சைவ சமயத்தில் பிடிப்பு உணர்வு உண்டாக்கி, மக்களை பக்தி சுவையில் ஈடுபடுத்திய பெருமை சேக்கிழாரை சாரும். தமிழர்களின் தனிப்பெரும் பேரிலக்கியமும் ஞான நூலுமாகிய பெரிய புராணம் வாய்மை நிறைந்த நூலாகும்.