விதியும் சமர்ப்பணமும்...

விதியும் சமர்ப்பணமும்


எவ்வளவுதான் இறை நம்பிக்கை இருந்தாலும்,  ஒரு சாதாரண இல்லறவாசிக்கு நம்பிக்கை என்பது கயிறுமேல் நடப்பது போன்றது ஆகும். நிம்மதி இன்மையின் கரையில்தான் நாம் அனைவரும் வசிக்கின்றோம். சுற்றிலும் வேதனைக்குரல்கள்; கஷ்டப்படுபவரின் அழுகுரல்கள், பசிக்கும் போது என்றோ குடித்த கஞ்சியை நினைத்து ஏங்கும் குழந்தைகளின் ஏழ்மை, நோயினால் அவதிப்படுவோர் என்பன போன்ற இன்னோரன்ன காரணிகளின் தாக்கங்களால் இறைநம்பிக்கை ஆட்டம் காணும் சந்தர்ப்பங்கள் வரும்.

இவற்றிற்கிடையில் தான் மனித பலவீனங்களை விற்று பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ஒரு மக்கள் கூட்டம்வீடு பற்றி எரியும் போது அதன் தூணை எடுக்க முயற்சி செய்பவர்கள் இவர்கள். தாயத்து கட்டினால் நினைத்ததெல்லாம் நடக்கும், ஹோமம் செய்தால் எல்லா துன்பங்களும் அகலும் என அற்புதமான மந்திர பலன்களை வாக்குக் கொடுக்கிறார்கள். அற்புதமான மாற்றங்களை எதிர்பார்த்து வாடும் பரிதாபமான மனிதர்கள் இவர்களது வலையில் விழுகிறார்கள்.

பட்டினியையும், கர்மவினையையும் அனுபவிப்பவர்களைக் குறை சொல்வதால் பயனில்லை. அதே சமயம், பெரும்பாலோர் விதி என்று சொல்லி வருந்துகிறார்கள். கரை ஏறுவதற்கு உள்ள உண்மையான வழி எது என்று தேடுவதில்லை. அப்படியே அதை அறிந்தாலும் நம்புவதில்லை. நம்பினாலும் அதில் உறுதியாக நிற்பதில்லை. எல்லோரும் தற்காலிக பலனையே தேடுகிறார்கள். உடனடி முன்னேற்றம். பொறுமையோ, முயற்சியோ இல்லை. குறுக்கு வழிகளை பின்பற்றவே ஆர்வம். விளம்பரத்தைக்கண்டு மயங்கி, துயரக்கடலைக் கடக்க விரும்புபவர்கள்.

கர்மபலனைக் கர்மத்தால் தடுக்கலாம். ஒரு கல்லை மேலே வீசிவிட்டு கீழே விழுவதற்கு முன்பு பிடிக்கலாம் அல்லவா? அதுபோல் இடையிலேயே கர்மபலனின் போக்கை மாற்றலாம். விதியை நினைத்து துன்புற வேண்டிய அவசியமில்லை. இறை சங்கல்பத்திட்கு முன்னால் ஜாதக பலன் மாறிவிடும். பகவானிடம் அனைத்தையும் சமர்ப்பித்து விடுங்கள் அவர் நம்மைக் காப்பார். ஆத்மசமர்ப்பணமே விதியை வெல்வதற்கான ஒரே வழி. அனைத்தையும் மறந்து செய்யப்படும் பிரார்த்தனைக்கு பணச்செலவு இல்லை என்பது மட்டுமல்ல, சரியான அளவற்ற முன்னேற்பாடும் தேவையில்லை. ஆயிரக்கணக்கில் செலவழித்து நடத்தும் ஹோமங்களும், காப்பு கவசங்களும் சுயநலத்திற்காக ஆகும் போது அது எந்த அளவு உயர்வு பொருந்தியது என்பது கூறாமலே புரியும்.

குறுக்குவழிகளைத் தேடாமல், புலனடக்கத்துடன் இறைவனை நாட வேண்டும். தனது திறமைக்கும், நம்பிக்கைக்கும், ஆசாரத்திற்கும் ஏற்ப பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளைச் செய்யலாம். உண்மையில் நாம் பேராசையத்தான் கட்டுப்படுத்த வேண்டும். தனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சம சித்தத்துடன் வாழ முடிந்தால் மனநிம்மதி கிடைக்கும். ஆத்மசமர்ப்பணத்தின் நற்பலன் தானே தேடிவரும். மாறாக, எளிய வழியைத் தேடி போகாத வழிகளில் போனால் விபரீத பலனே விளையும். துக்கமும், நிராசையும் மேலும் அதிகரிக்கும். எனவே எல்லோர் உள்ளத்திலும்ல் இறைவனின் பாதார விந்தங்களே சரணம் என்ற நம்பிக்கை உறுதியாக வேண்டும்  சரணாகதி மனப்பான்மை தான் ஒருவனது ஆன்மீக வாழ்வின் அடித்தளமாகும்.