பிரதோஷம் எப்படி விஷேசமானது?

 
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும் . எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக மாதமிருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும்தான். திரயோதசி நாளில் சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ காலமாகும்.

பொதுவாக வளர்பிறையிலோ, தேய்பிறையிலோ, மாலை வேளையில் திரயோதசி வந்தால் அது மஹாபிரதோஷம் ஆகும். அதுவே சனிக்கிழமைகளில் வந்தால் அது சனிப் பிரதோஷமாகும்.

தேவர்களின் துன்பம் போக்க நஞ்சை உண்ட சிவபெருமான், அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ கயிலாய மலையில் பிரதோஷ காலத்தில்தான் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையில் திருநடனமாடி மகிழ்வித்தார். அதனால் பிரதோஷ காலத்தில் தவறாமல் சிவாலயத்திற்குச் சென்று நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நடமாடும் கோலத்தில் வழிபடுதல் சிறப்பு.

ஆகவே, பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை சிவாலயத்தில் வழிபடும்போது சோம சூக்த பிரதட்சணம் செய்வது விஷேச பலனைத் தரும்.

சிவாலயத்தில் நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வணங்கும் முறைக்கு சோம சூக்த பிரதட்சணம் என்று பெயர்.

இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்வதால் ஒரு வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ தினத்தில் இந்த சோம சூக்த பிரதட்சணம் செய்தால் ஐந்து வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.


பிரதோஷ விரதம்

பிரதோஷ விரதம் (திரயோதசி)

தேய்பிறை, வளர்பிறை என இரண்டு பக்ஷங்களிலும் வரும் அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் (பிற்பகல் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை ) பிரதோஷகாலம் எனப்படும். இந்நேரத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும். இவ்விரத காலத்தில் அன்றாடக் கடமைகளைச் செய்து, பகல் உணவு கொள்ளாமல் நீராடி மாலை வழிபாடுகளைச் செய்து சிவாலயம் சென்று பிரதோஷகாலப் பூசையைத் தரிசிக்க வேண்டும்.

பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்து பிறகு சோமசூத்திரப் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். " சோமசூத்திரப் பிரதக்ஷிணம்" என்னும் வழிபாட்டு முறை என்பது முதலில் இடபதேவரை வணங்கி, இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து, பின் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி,  வலப்பக்கமாகக் கோமுகை (பசுவின் முகம் போன்று செய்யப்பட்ட தீர்த்தம் விழும் பகுதி)வரை சென்று, மீண்டும் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி, மறுபடியும் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கி,   இடபதேவரை இம்முறை தரிசியாது  வலமாகக் கோமுகைவரை சென்று திரும்பி, இடபதேவரைத் தரிசியாமல் இடமாகச் சென்று,  சண்டேஸ்வரரை வணங்கிப், பின் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து, அவரது  இரு கொம்புகளின் ஊடாக சிவலிங்கப் பெருமானை வணங்க வேண்டும் என்னும் விதிக்கமைய வழிபடுதலாகும். கோமுகையைக் கடவாது திருக்கோவில் வலம்வரும் இந்த  சோமசூத்திரப் பிரதக்ஷிணம் பிரதோஷகால வழிபாட்டில் மிகச் சிறப்பிடம் பெறுகின்றது.

பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்குச் செய்யும் "காப்பரிசி”  நிவேதனம் சிறப்பானது. பச்சரிசியையும், பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு ஊறவைத்து வடிகட்டி அத்துடன் வெல்லமும்,
தேங்காய்ப்பூவும் சேர்த்துச் செய்வதாகும். பிரதோஷ கால உணவாக இக்காப்பரிசியையோ அல்லது சர்க்கரைப் பொங்கலையோ சாப்பிடலாம். பிரதோஷ காலத்தில் வீண் வார்த்தை பேசாது மௌனமாகத் தியானம் செய்தல் வேண்டும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற இம்மாதங்களுள் வரும் சனிப்பிரதோஷத்தில் (பிரதோஷம் சனிக்கிமையில் வரும்போது) விரதத்தை ஆரம்பித்து ஒரு வருடம் முறையாகக் கடைப்பிடித்துப் பின்னர் பூர்த்தி செய்தல் வேண்டும். தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவோர் விரதத்தைத் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு வருடமும் விரத உத்தியாபனம் செய்தல் வேண்டும். இவ்விரதத்தைக் கைக்கொள்ளுவோருக்குக் கடன், வறுமை, நோய் அவமிருத்து, பயம், மரணவேதனை நீங்கும்.

”இரண நல்குர(வு), இரும்பாவம், இரும்பசி,  உரோகம்
 அரணறும் பயம், கிலேசம், கேதம், அவமிருத்து
 மரண வேதனை இவையெல்லாம் அகற்றென வணங்கிப்
 புரண நாதனைப் பிரதோடத்தில் போற்றிடத் தகுமால்"