அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்

[Image1]




மூலவர் :                      காமாட்சி அம்மன்
 உற்சவர் :                                      -  
அம்மன்/தாயார் :                         -
தல விருட்சம் :               செண்பகம்
தீர்த்தம் :                           பஞ்ச கங்கை
ஆகமம்/பூஜை :                சிவாகமம்
பழமை :                  2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :                     கச்சி
ஊர் :                                    காஞ்சிபுரம்
மாவட்டம் :                      காஞ்சிபுரம்
மாநிலம் :                          தமிழ்நாடு

பாடியவர்கள்:

ஆதிசங்கரர்.

திருவிழா:

மாசியில் பத்துநாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா, ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள். ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும். தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் நாட்களில் அம்மன் தங்கரதத்தில் உலா வருவாள்.

தல சிறப்பு:

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் முக்கியமானதாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வாயாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.

திறக்கும் நேரம்:

காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் -631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.

போன்:

+91 - 44-2722 2609

பொது தகவல்:

காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் உள்ளது.

அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பதி விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை

இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள்.

அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது.

இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோசம் ஏற்படுவதில்லை.எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர், லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

தலபெருமை:

துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு.

இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்துõலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் "காமகோடி காமாட்சி' என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.

இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும்.

இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.

துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்க செல்லும் போது மவுனமாக செல்ல வேண்டும். பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.

சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம்.

அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள்.

கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.

கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று

காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் காமாட்சி கோயிலை தவிர அங்கெல்லாம் வேறு அம்பாள் சந்நிதி கிடையாது.

கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும், திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும், துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு

இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி ,லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீ ஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார்.இக்கோயிலுக்குள் உள்ள இவரது சந்நிதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.

இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள். இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம். அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள். காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.

துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர்.லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர்.இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர்.அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.

இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம்.ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக õற்றினாராம்.இவருக்கு இக்கோயிலில் தனி சந்நிதி உண்டு.

இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.

காமாஷி தத்துவம்

காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்

காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள்.

பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.

தல வரலாறு:

பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.

அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்

அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்







மூலவர்                    :  தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி
உற்சவர்                   :                                     -
அம்மன்/தாயார்     :                       -
தல விருட்சம்        :            நெல்லி மரம்
தீர்த்தம்                      :             சண்முக நதி
ஆகமம்/பூஜை         :            சிவாகமம்
பழமை                        :   1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்           :            திருஆவினன்குடி
ஊர்                               :                   பழநி
மாவட்டம்                 :            திண்டுக்கல்
மாநிலம்                     :              தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரிநாதர் திருப்புகழ் , நக்கீரர்

திருப்புகழ்

திமிர வுததி யனைய நரகசெனன மதனில் விடுவாயேல் -

செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியு மணுகாதே;

அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் வரவேநின் -

அருள தருளி யெனையு மனதொடடிமை கொளவும் வரவேணும்;

சமர முகவெ லசுரர் தமதுதலைக ளுருள மிகவேநீள் -

சலதி யலற நெடிய பதலைதகர அயிலை விடுவோனே;

வெமர வணையி லினிது துயிலும்விழிகள் நளினன் மருகோனே -

மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் பெருமாளே.

                                                                                                    -அருணகிரிநாதர்


திருவிழா:

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

திறக்கும் நேரம்:

திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்

போன்:

+91-4545 - 242 293, 242 236, 242 493.

பொது தகவல்:

திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு

பிரார்த்தனை

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்

நேர்த்திக்கடன்:

முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன்

தலபெருமை:

தண்டாயுதபாணி சிறப்பு: விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடஅடைக்கலமாவார்கள்.இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். 

காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார்."தண்டம்' என்றால் "கோல்' அல்லது "அபராதம்' என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். 

முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.

சித்தர் போகர் : இவர் இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர்.சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும்.சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.

முருகன் கையில் அருணகிரியார்!:மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். 

இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.

தம்பியை காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். 

"சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

மூன்றாம் படை வீடு: முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., துõரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருஆவினன்குடி சிறப்பு: குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், "திருஆவினன்குடி' என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம்.இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டுமும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.

முருகனுக்கு அன்னாபிஷேகம்: பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

முதல் வணக்கம் இடும்பனுக்கே...!: தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.

இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி துõக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

தைப்பூச விழா சிறப்பு: தைப்பூசத்திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள். இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது.

தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.

பங்குதாரராக முருகப்பெருமான் : மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக்கொண்டுள்ளனர்.தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு என அழைக்கப் பெறும் முக்கிய தலம்.

அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார்

தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம்.

அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம்.

தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது.

பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது.

மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம்.

தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான்.

பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது.

1300 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன.புராண காலத்தலும்,சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம். செலுத்துகின்றனர்.

தல வரலாறு:

நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். 

பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், "குழந்தை வேலாயுதர்' என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், "பழம் நீ' (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், "பழநி' என மருவியது.

சிறப்பம்சம்:

விஞ்ஞானம் அடிப்படையில்: நவபாஷாண மூர்த்தி : மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் எனும் மூலிகை கலவையால் ஆனது. சிலை உயிர்ப்புள்ளது என்பதும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.சுவாமியின் மீது பூசி எடுக்கப்படும் ராக்கால சந்தனமும், கவுபீக தீர்த்தமும் மிகவும் அபூர்வ மருத்துவ குணம் கொண்டவை. இவர் கையில் உள்ள தண்டம் மிக்க அருள் வாய்ந்தது.

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்





மூலவர் :                                       விநாயகர்
உற்சவர் :                                                -
அம்மன்/தாயார் :                                 -
தல விருட்சம் :                         மருதமரம்
தீர்த்தம் :                                                 -
ஆகமம்/பூஜை :                                   -
பழமை :                          1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :                                    -
ஊர் :                                          பிள்ளையார்பட்டி
மாவட்டம் :                               சிவகங்கை
மாநிலம் :                                   தமிழ்நாடு

திருவிழா:

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப் பெருமானும் திருவீதி பவனி வருவார். பிள்ளையார், மருதங்குடி நாயனார் சன்னதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும். 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூஜையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர்

தல சிறப்பு:

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், திருப்புத்தூர் தாலுகா, பிள்ளையார்பட்டி - 630207, சிவகங்கை மாவட்டம்.

போன்:

+91-4577 - 264240 / 264241

பொது தகவல்:

காலத்தால் பழமையான இது ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ""தி ருப்புடைமருதூர்'' தஞ்சை மாவட்டத்தில் ""திருவுடைமருதூர்'', ஆந்திர மாநிலத்தில் ""ஸ்ரீசைலம்'' சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

தேர்த்திருவிழா : விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.

9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.

ராட்சத கொழுக்கட்டை: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்.

பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பர்

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்




மூலவர் :                                             ராஜகணபதி
உற்சவர் :                                                       -
அம்மன்/தாயார் :                                        -
தல விருட்சம் :                                           -
தீர்த்தம் :                                                        -
ஆகமம்/பூஜை :                                          -
பழமை :                             500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :                               சைலதேசம்
ஊர் :                                                        சேலம்
மாவட்டம் :                                          சேலம்
மாநிலம் :                                          தமிழ்நாடு

திருவிழா:

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது.மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை, சதுர்த்தி நாளில் கணபதி யாக¬ம், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. ஆவணியில் சதுர்த்தி விழா பத்து நாள் நடக்கிறது. இதில் மூன்றாம் நாள் திருக்கல்யாண வைபவ¬ம், 10ம் நாள் புஷ்ப பல்லக்கு ஊர்வல¬ம், விழா நடைபெறும் நாளில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கிறது. விழாவில் ¬முதல் நாளான சதுர்த்தியன்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துபடியும், 8ம் நாள் ¬முத்தங்கி சேவையும் மிக சிறப்பாகும்.

தல சிறப்பு:

இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் "ராஜ கணபதி' என அழைக்கப்படுகிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம்,சேலம் மாவட்டம்.

பொது தகவல்:

சுகவனேஸ்வரர் திருக்கோயில் இத்தலத்தின் மிக அருகில் அமைந்துள்ளது.

பிரார்த்தனை

ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

சேலம் வரும் பக்தர்கள் அனைவரும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். தேவர்கள் பெருமானை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, சேரமானுக்கும் ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரஸ்வதிக்கு சிவலோகம் கிடைத்தது, கலிங்கத்து மன்னன் ஹேமாங்கதனுக்கு மீண்டும் ராஜ்யத்தை பெறும்படி பெருமான் அருள் செய்த தலம் என போற்றப்பட்ட சுகவனேஸ்வரர் தலப்பெருமைகள் ராஜகணபதிக்கும் உள்ளதால் இத்தலம் பக்தர்கள் மத்தியில் வெகு பிரசித்தம்

தல வரலாறு:

400 ஆண்டுகளுக்கு ¬முன் ஸ்தாபனம் செய்யப்பட்டது சேலம் ராஜகணபதி கோவில். கலியுக கண் கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. இத்தலம் காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் "சைலதேசம்' என பெயர் பெற்றது.

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில்

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில்





மூலவர் :                                     விநாயகர்
உற்சவர் :                                              -
அம்மன்/தாயார் :                               -
தல விருட்சம் :                                  -
தீர்த்தம் :                                               -
ஆகமம்/பூஜை :                                 -
பழமை :                         500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :                                   -
ஊர் :                                               ஆத்தூர்
மாவட்டம் :                                  சேலம்
மாநிலம் :                                  தமிழ்நாடு

திருவிழா:

விநாயகர் சதுர்த்தி

தல சிறப்பு:

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. பிள்ளையார் முன்பு ஒற்றை மூஞ்சூறு வாகனம் இருக்கும். மகாராஷ்டிராவில் இரட்டை மூஞ்சூறு வாகனங்களைப் பார்க்கலாம். ஆனால் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரிய மூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ள வித்தியாசமான கோயில் இது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்

பொது தகவல்:

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இங்குள்ள விநாயகர் முன்பு பூஜை முடித்த பிறகே தங்களது வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

இக்கோயிலில் முக்கிய பூஜையே வாகனங்களுக்கு தான். புதிய வாகனம் வாங்குவர்கள் ஆர்.டி.ஓ., ஆபீசில் பதிவை முடித்து விட்டு பிள்ளையார் கோயிலுக்கு வந்து விடுவார்கள். அங்கு வாகனத்திற்கு விநாயகர் முன்னிலையில் பூஜை முடிந்த பிறகே பயன்படுத்துகிறார்கள். ஆயுதபுஜை காலத்தில், ஏராளமான வாகனங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படும்.

இதுதவிர அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை நடத்தப்படுகிறது.

மணமக்கள் அழைப்பு : இங்கு மற்றொரு சிறப்பம்சம் பெண், மாப்பிள்ளை அழைப்பு வைபவமாகும். வீட்டிலிருந்து பெண், மாப்பிள்ளை அழைப்பதை விட, இந்த கோயிலில் இருந்து அழைத்துச் செல்வதால், மணமக்கள் தீர்க்காயுளுடன் வாழ்வர் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், கோயிலிலேயே திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது.

தல வரலாறு:

ஆத்தூர் நகரத்தில் வசிஷ்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர். வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், "வெள்ளம் பிள்ளையார்' என்று பெயரும் சூட்டினர். காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் ஆனார்.

பிள்ளையார் அமர்ந்த இடம் மிகவும் செழிப்படைந்தது. ஒரு கட்டத்தில் முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட அனைத்தும் பிள்ளையாரைச் சுற்றி அமைந்தன. போக்குவரத்து அதிகரித்தது. இவ்விடத்தை தாண்டிச் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகரை வணங்கிச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு காரியம் கைகூடவே, இவர் "வாகனப் பிள்ளையார்' என்ற பெயர் பெற்றார்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

மூலவர் :                                              விநாயகர்
உற்சவர் :                                                      -
அம்மன்/தாயார் :                                       -
தல விருட்சம் :                                          -
தீர்த்தம் :                                                       -
ஆகமம்/பூஜை :                                         -
பழமை :                                500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :                                          -
ஊர் :                                                       பாகலூர்
மாவட்டம் :                                   கிருஷ்ணகிரி
மாநிலம் :                                           தமிழ்நாடு


திருவிழா:

சித்திரை மூல நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தீபாவளி, மார்கழி பள்ளியெழுச்சி, தை பொங்கல், தை அமாவாசை. அம்மனுக்கு பவுர்ணமி பூஜை, நவராத்திரி பூஜை, முருகனுக்கு மாதகார்த்திகை, சஷ்டி, தைப்பூச பூஜை.

தல சிறப்பு:

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் அனைத்தும் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்கள்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்-635 124, கிருஷ்ணகிரி

போன்:

+91- 94436 18811

பொது தகவல்:

சுற்றுப்பிரகாரத்தில் தண்டாயுதபாணியும் அவருக்கு இருபுறத்தில் பாலமுருகனும், திருச்செந்தூர் முருகனும் உள்ளனர். ஐயப்பன் 18 படிகளுக்கு மேல் அமர்ந்துள்ளார். பிரகாரத்தின் முடிவில் நவக்கிரகங்கள் அனைத்தும் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்கள்.

பிரார்த்தனை

இங்கு எந்த கிரகத்தின் தோஷமாக இருந்தாலும் தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.

நேர்த்திக்கடன்:

கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் ஒரு சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி பின் ஒவ்வொரு சதுர்த்தியிலும் ஒவ்வொரு விளக்காக குறைத்து தீபமேற்றும் பழக்கம் உள்ளது. விளக்கின் எண்ணிக்கை குறைவது போல பக்தர்களின் கடன் சுமை குறைகிறது என்று நம்புகிறார்கள். எனவே இவரை "கடன் தீர்க்கும் கணபதி' என்றும் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

தலபெருமை:

கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் சுவாமி, அம்மன், பிள்ளையார்,

நாரதர், சுப்ரமணியர், மற்றும் ரிஷபத்துடன் கூடிய கைலாய காட்சி காண்பவரை மெய் சிலிர்க்க வைக்கும். கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியானமண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்கு செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல், படிகளின் மீது ஏறி பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்க தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.இவருக்கு இருபுறமும் கற்பக விநாயகரும், மாணிக்க விநாயகரும் உள்ளனர். சித்தி விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமும் பலி பீடமும் அமைந்துள்ளது.

விநாயகரின் வலதுபுறத்தில் தாய் சொர்ணாம்பிகையும் அவளது இருபுறமும் மீனாட்சி, விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.

முருகன், அம்மன் கோயில்களுக்கே உரித்தான பால்குட வழிபாடு இங்கு விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுக்கின்றனர்.

தல வரலாறு:

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள்பாலிக்கிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்






மூலவர் :                              ஸ்ரீ விநாயகர் (விக்னேஸ்வர்)
உற்சவர் :                                                          -
அம்மன்/தாயார் :                                           -
தல விருட்சம் :                                              -
தீர்த்தம் :                                                           -
ஆகமம்/பூஜை :                                             -
பழமை :                               500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :                                               -
ஊர் :                                       ஈச்சனாரி
மாவட்டம் :                         கோயம்புத்தூர்
மாநிலம் :                             தமிழ்நாடு


திருவிழா:

விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா சித்திரைத் திருவிழா 2 நாள் திருவிழா. மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி, அம்மாவாசை, சதுர்த்தி தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் தைபூசம், கார்த்திகை தீபம்

தல சிறப்பு:

5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர்

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி- 641021. கோயம்புத்தூர்

போன்:

+ 91 - 422 - 267 2000, 267 7700.

பொது தகவல்:

அழகிய கோபுரம், மாடங்கள், மண்டபங்கள் அமையப்பெற்ற திருக்கோயில்

பிரார்த்தனை

விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து வளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப்பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.

நேர்த்திக்கடன்:

சிதறு தேங்காய் போடுதல்,கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்ளாக செய்கிறார்கள்

தலபெருமை:

இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும். திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.

5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம். கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.

தல வரலாறு:

மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம் இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்


அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

[Image1]



மூலவர் :                            வரசித்தி விநாயகர்
உற்சவர் :                                         -
அம்மன்/தாயார் :                          -
தல விருட்சம் :                             -
தீர்த்தம் :                                          -
ஆகமம்/பூஜை :                            -
பழமை :                          500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :                             -
ஊர் :                                 காணிப்பாக்கம்
மாவட்டம் :                  சித்தூர்
மாநிலம் :                     ஆந்தர பிரதேஷம்


திருவிழா:

விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு.

தல சிறப்பு:

விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .

போன்:

+91- 8573 - 281 540, 281 640, 281 747.

பொது தகவல்:

பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

பிரார்த்தனை

இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

கணவன் மனைவி பிரச்னை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

தலபெருமை:

சத்தியப் பிரமாணம்: தினமும் மாலை "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.

ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.

பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று

அய்யப்பனின் அறுபடை வீடுகள்

அய்யப்பனின் அறுபடை வீடுகள்






தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல், அய்யப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை அய்யப்பனின் அறுபடை வீடுகள் என்றே சொல்லலாம்.

சபரிமலை

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.

எருமேலி

இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

ஆரியங்காவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.

அச்சன்கோவில்

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

பந்தளம்

இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

குளத்துப்புழா

செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

- சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.