சித்தர்கள் என்றால் யார்...?
கடவுளைக் காண முயல்பவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களை சித்தர்கள் என்றும் தேவாரம் வேறு படுத்திக் கூறும்.
ஆகமமாகிய இந்த மனித உடம்பிலே தெய்வபக்திகொண்டு அருட்ஷக்தியை வளர்த்து ஆன்ம பரிமாணத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருளை வழங்கி வருகின்ற பெரியோர்களே, மகான்கள் அவர்களே சித்தர்கள் என்று விளக்கம் கூறுகிறார் மீ. ப. சோமசுந்தரனார்.
மூச்சினை அடக்கி யோகா ஆற்றலினால் உடலில் உள்ள மூலாதாரத்தில் மனதை முறையாகக் நாட்டிக் குண்டலினியை எழுப்பி பற்பல அனுபவமும் வெற்றியும் கண்டு அப்பாலுள்ள எல்லாம் என பொருளில் நினைத்து சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவி உள்ளது என அறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுகிறார்.
இவர்கள் சொல்வது இருக்கட்டும். சித்தர்கள் பற்றிய குறிப்புகளை சித்தர்கள் எப்படி தருகிறார்கள்??
சித்தர்கள் என்ற கேள்விக்கு அவர்களே தரும் பதில் இதோ.....
"ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்" என்று கருவூரர் சொல்கிறார்.
"எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி
ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன்" என்ற சட்டை முனியும்,
"சிந்தை தெளிந்து இருப்பவ ஆர், அவனே சித்தன்"என்றும்,
"செகமெல்லாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்"என்றும் வான்மீகரும்,
" யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே" என்றும்,
"சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே" என்றும் திருமூலரும் சித்தர்களுக்கு விளக்கம் தருகிறார்.
இந்த சித்தர் என்ற திருக் கூட்டத்தினர் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பும் இருந்தமை அவரது திரு வாக்கினாலும் புலனாகிறது.
"மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன்"
என்று தொல்காப்பியர் புறத்திணையியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு உரைவகுத்த நச்சினார்க்கினியார், "காமம், வெகுளி, மயக்கம்" இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன்" என உரை எழுதிக் கலசயோனியாகிய அகத்தியர் முதலியோரும் அறிவர் என்றுணர்க" என விளக்கம் எழுதியுள்ளார். எனவே தொல்காப்பியர் கூறிய அறிவரைச் சித்தர் என விளக்கம் கூறுகிறார். இதனால் அவர்தம் காலத்து சித்தர்களை "அறிவர்"என அழைக்கப்பட்டது புலனாகும்.