நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?

நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?

Temple images
பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதாதா? என்றே பலரும் நினைக்கின்றனர். நீயும் உருவாகு; பிறரையும் உருவாக்கு என்பது சுவாமி விவேகானந்தரின் மேன்மையான கருத்து.  சுவாமிஜி மட்டுமல்ல, பல அறிஞர்கள் இதற்கான தேவையைப் பல தலைமுறைகளாகப் போதித்து வருகின்றனர்.

மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார். சமுதாயமும் தனி மனிதனும் என்ற தலைப்பிலுள்ள அவரது எண்ணங்களின் சாரம் இது: தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே, கூடி வாழும் தன்மை உடையது தான். பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம், பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம், பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம். நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும், பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளன. இவை நம்மை வந்தடைந்ததும்கூட பிறர் காலம் காலமாக வளர்த்த மொழியின் மூலமாகத்தான்.
மொழி இல்லாமல் நமது அறிவாற்றல் என்பது மிக அற்பமாக இருந்திருக்கும். மொழியின் வளர்ச்சி இல்லை யென்றால் நாம் சிறிதே முன்னேறிய உயர்வகை விலங்கினமாக மட்டுமே இருந்திருப்போம். 

பிறப்பிலிருந்தே ஒரு தனிமனிதனைச் சமூகத்திலிருந்து பிரித்துத் தனியாக விட்டுவிட்டால், அவனது முதிர்ச்சியும் பக்குவமும், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கக் கூடும். தனிமனிதன் என்பவன், அவனது எண்ணங்களும் குணங்களும் சேர்ந்த ஓர் உயிர். அந்த எண்ணம் - குணம் ஆகியவற்றின் சேர்க்கை மட்டுமே அவனைத் தனிச்சிறப்புடையவனாக மாற்றாது. மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அவன் இருப்பதால், பிறப்பு முதல் இறப்பு வரை அந்தச் சமுதாயம் அவன் எண்ணங்களையும் செயல்களையும் இயக்கி, அவனைத் தன் உந்துதலுக்கு உட்படுத்தி, அவனது குணாதிசயங்களைத் தனித்தன்மையுடன் விளங்க வைக்கிறது. இது ஆன்மிக வாழ்க்கைக்கும், ஆன்மிகத் துறை சாராத வாழ்க்கைக்கும் சமமாகப் பொருந்தும். சமுதாயத்தில் ஒரு மனிதனின் மதிப்பு, அவனது உணர்வுகளும் எண்ணங்களும் செயல்களும் எந்த அளவிற்குச் சகமனிதர்களுக்கு நன்மைபயக்கின்றன என்பதைப் பொறுத்தே கணக்கிடப்படும். மேற்கண்ட கருத்துகளைப் பார்க்கும்போது ஒரு மனிதனை நல்லவன் என்றோ தீயவன் என்றோ மதிப்பதற்கான அளவுகோல் அவன் தனது சமுதாயத்தில் பொருந்தி வாழக்கூடிய தன்மையினையே பெரிதும் சார்ந்துள்ளது என்று கூறலாமா?

அப்படிப்பட்ட ஒரு முடிவு முற்றிலும் உண்மையானதாக இருக்காது. ஆன்மிகத் துறையிலும், உலக வாழ்க்கையிலும், பண்பு நெறிகளிலும், இன்று சமுதாயம் கண்டுள்ள அளவற்ற முன்னேற்றங்கள் அனைத்தும் பல தலைமுறைகளில் திறன்மிக்க தனிமனிதர்களால் உருவாக்கப்பட்டவை. யாரோ ஒருவர் நெருப்பின் பயனைக் கண்டறிந்தார், ஒருவர் விவசாயம் செய்யத் தொடங்கினார். ஒருவர் ரயில் என்ஜினை உருவாக்கினார். 

தனிமனிதனால்தான் சிந்திக்க முடியும். அந்தச் சிந்தனை மூலம் சமுதாயம் முன்னேறுவதற்கான பண்புகளைக் கற்பிக்க முடியும். அந்தச் சமுதாயத்தில் உள்ள மக்கள் கடைப்பிடிக்க நெறிகளை வகுக்க முடியும். சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படி தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று, சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது. எனவே, தனிமனித சுதந்திரம் இல்லாமல் சமுதாயமும், வளமான சமுதாயமின்றி தனி மனிதனும் வளர்ச்சி காண முடியாது என்பதை நாம் நன்றாக நினைவில் நிறுத்த வேண்டும். ஆகவே கண்டிப்பாக நீங்களும் உருவாக வேண்டும், பிறரையும் உருவாக்க வேண்டும்.

உதவிக்கு ஒரு கதை: ஒரு நாள் ஒரு எறும்பு ஒரு குளத்தில் தவறி விழுந்து விட்டது. தண்ணீரில் இருந்து கரைக்கு வர முடியாமல் அது தத்தளித்தது. இதை அக் குளக் கரையில் இருந்த மரத்திலிருந்த ஒரு புறா கவனித்தது. அது எறும்புக்கு உதவி செய்ய எண்ணி மரத்திலிருந்து ஒரு இலையைப் பிடுங்கி எறும்பின் அருகில் போட்டது. இலை தண்ணீரில் மிதந்தது. அந்த இலையின் மேல் ஏறி எறும்பும் கரை சேர்ந்து உயிர் பிழைத்தது. தன்னைக் காப்பாற்றிய புறாவிற்கு மனதினுள் நன்றி சொல்லிக் கொண்டது.

பின்னர் ஒரு நாள் அந்தப் புறா மரத்தில் இருக்கும் போது ஒரு வேடன் அதைக் கண்டான். பசியால் உணவு தேடிக் கொண்டிருந்த அவ் வேடன், அதைக் கொல்ல எண்ணி தன் அம்பு-வில்லை எடுத்துக் குறி பார்த்தான். வேடன் குறி பார்ப்பதை அந்தப் புறா கவனிக்க வில்லை. இதை எறும்பு கண்டது. தன்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றிய புறாதான் அது என்பதை அந்த எறும்பு உணர்ந்தது. உடனே வேகமாக ஓடிப் போய் வேடனின் காலில் கடித்தது. வேடன் அலறியபடி காலைக் குனிந்து பார்த்தான். இந்தச் சத்தத்தைக் கேட்டுப் புறா திரும்பிப் பார்த்தது. தன்னைக் கொல்ல முயன்ற வேடனைக் கண்டது. உடனடியாக மரத்தை விட்டுப் பறந்தது. பறக்கும் போது, அவனைக் கடித்த எறும்பைக் கண்டது. தான் முன்னர் காப்பாற்றிய எறும்பு தன்னை இப்போது காப்பாற்றியதை நினைத்து மகிழ்ச்சியால் நெகிழ்ந்தது. ஓரறிவு உள்ள எறும்பு, புறாவுக்கே அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் போது, ஆரறிவு படைத்த மனிதன் அவசியம் அடுத்தவருக்கு  உதவி செய்தால் பின்னால் அது திரும்பக் கிடைக்கும்.