கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பது ஏன்?

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பது ஏன்?

Temple images
அந்த காலத்தில், ஒரு ஊரை உருவாக்குவதற்கு முன், கோயிலை உருவாக்கினர். அதற்கு முன்,நீரோட்டம் பார்த்து, மண்ணின் தன்மை அறிந்து, சாலை  அமைத்து, அதன் பின்னரே கோயில் கட்டினர். இதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பர். இதற்கு உதாரணம் தேட வேண்டுமென்றால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னாரு கோட்டைக்கு செல்லலாம். விருதுநகருக்கும், சாத்தூருக்கும் நடுவே, சிமென்ட் ஆலைக்கு நேர் கிழக்கே பயணித்தால், துலுக்கபட்டியை கடந்து, மன்னாரு கோட்டையை அடையலாம். இதன் அடையாளமாக தியாகராஜசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது. இது கி.பி. 10ம் நூற்றாண்டில், பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலையொட்டி, கட்டப்பட்ட கற்கோயில் தூர்ந்து போன நிலையில் பாழடைந்து கிடக்கிறது.
சிலைகள் ஏதுமில்லை. தியாகராஜசுவாமி கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்றவை, பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டிருந்தாலும், பின்னாளில், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், இப்பகுதி பாளையக்காரர் ஒருவரால் புதுப்பிக்கப்பட்டது. அவரது சிலை கோயில் மண்டப தூணில் உள்ளது. கோயில் அருகில், கி.பி. 10ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் உள்ள வாசகம் நம்மை உறைய வைக்கும்.  சூரங்குடி நாட்டில் உள்ள ஆத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த காயமுற் கிழவன் ஸ்ரீவேலன் சிவப்பு கழன் என்பவன், தன் எஜமானன் கலியுக கண்டாடி தான்மா செட்டி என்பவரின் நலனுக்காக, விரதம் இருந்து, தன் தலையை தானே வெட்டி பலியானான் என்ற செய்திதான் அது. இதன்மூலம், அந்த வேலையாளின் விசுவாசம் தெரிய வருகிறது. மன்னாருகோட்டை பகுதியில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளை கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரிகிறது.