நவராத்திரியில் சர்வ சவுபாக்கியம் அருளும் ஒன்பது கர உலக நாயகி!
சித்திரகுப்தர் வெறும் கர்மக் கணக்கு எழுதுபவர் என நினைப்பது கூடாது. மனிதனின் ஆத்மவிசாரத்திற்கு வித்திடுபவர் இவரே. ஆயுர்தேவியின் திருவடிக்கருகே இவர் அமர்ந்திருக்கிறார். தலைப்பாகையுடன் கையில் ஏடு, எழுத்தாணியோடு. ஆயுர்தேவி தனது வலது முதல் கரத்தில் கயாசுர மகரிஷியைத் தாங்கியிருக்கிறாள். இந்த தேவியை உபாசனை செய்து உன்னத நிலையை அடைந்தவர் கயாசுர மகரிஷி. நவராத்திரியில் வரும் பிரதமை திதியில், இரண்டு வயது நிறைந்த பெண் குழந்தையை அலங்கரித்து, ஆபரணம் இட்டு, ஸ்ரீமாதேவியாக வரித்து வணங்கவேண்டும். இப்படிச் செய்வதால் தேவியின் அருட்தன்மை பன்மடங்காகப் பெருகும். ஸ்ரீமாதேவியை மனதால் தியானித்து பிரதமை திதியன்று ஏதேனும் ஒரு கோயிலில் மாக்கோலமிட்டு, மல்லிகைப் பூவை பெண்களுக்கு அளித்து வழிபட்டால் வேண்டும் வரம் பெறலாம். இமயமலைப் பகுதியிலும், மஹா அவதூத பாபா த்ரைலிங்க சுவாமி போன்ற அற்புத மகான்கள் தினமும் வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள தாராதேவி ஆலயத்திலும் ஆயுர்தேவிக்கு சன்னதி அமைந்துள்ளது என்றும்; குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி. ஆயுர்தேவியை சாதாரணமாகவும், கலசம் வைத்தும் வழிபடலாம். நவராத்திரியில் கலச பூஜை மிகவும் விசேஷமானதாகும். வெள்ளிக் கலசம், வெண்கலக் கலசம், செப்புக் கலசம், மா அல்லது பலா மரத்திலான மரக்கலசம் ஆகியவையே பூஜைக்கு உகந்தவையாகும். கலசத்தை தூய்மைப்படுத்தி மஞ்சள், சந்தனம், குங்குமமிட்ட முழுத்தேங்காயை மேலே வைத்து, மாவிலை, பூ சேர்த்து, பூர்ணகும்பக் கலசமாய் அமைக்கவேண்டும். சுத்தமான நீர் அல்லது கங்காநீர், புனித நதி நீரை, மூன்று முறை கொதி வந்ததும் ஆறவைத்து கலசத்தில் ஊற்றவும். வெட்டிவேர், துளசி இவற்றுடன் சிறிதளவு (பொடி செய்த) கடுக்காய், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை கலச நீரில் சேர்க்கவும். நுனி வாழை இலையை கிழக்கு நோக்கி வைத்து பச்சரிசி பரப்பி, அதில் வலது மோதிர விரலால் உ ஓம் என எழுதி பின் அரிசிமேல் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்திற்கு பட்டு அல்லாத மஞ்சள் வஸ்திரம் சாற்றலாம் (நார்ப்பட்டு). நைவேத்தியமாக பொன்நிற (மஞ்சள்) பதார்த்தங்கள், சர்க்கரைப்பொங்கல், குங்குமப்பூ சேர்த்த பால் கலந்த கேசரி (கேசரி பவுடர் தவிர்க்கவும்) மஞ்சள் நிற வாழைப்பழங்கள், மஞ்சள் பிள்ளையார் வைத்து விநாயக பூஜையுடன் தேவி பூஜை தொடங்குகிறது. இதுமுறைப்படி கொஞ்சம் விரிவாக இருப்பதால், எல்லாருமே செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தில் எளிய நாமாவளிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. ஆயுர்தேவியை நினைத்து தியானிக்க : ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜயகௌரீ ஆயுர்தேவி நமோ நமஸ்தே சிவகாம ஸுந்தரி நமோ நமஸ்தே அருணாசலேச்வரி நமோ மஹாகௌரீ நமோ நமஸ்தே. ஆயுர்தேவியின் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவ சேனாயை ஆயுர்தேவ்யை ஸ்வாஹா.- 24,36,64,108 முறை ஜெபிக்கவும். ஆயுர்தேவி காயத்ரி ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே பராசக்த்யை ச தீமஹி தந்தோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத். இந்த மந்திரத்தை 24,36,64,108 முறை ஜெபிக்கவும். ஆயுர்தேவியின் படம் கிடைத்தால் வைத்துப் பூஜிக்கவும். அல்லது தேவியை மனதில் நினைத்து மேற்கண்டவற்றைத் துதிக்கவும். அனைவரும் வழிபடலாம். அவரவர்களுக்குத் தெரிந்த சுலோகம் அல்லது பாடல் சொல்லியும் வழிபடலாம். இயன்றவர் அன்னதானம் செய்யலாம். ஒருவருக்கேனும் செய்வதும் தவறில்லை. அன்னதானத்தால் பலன் பன்மடங்காகிறது. ஆயுர்தேவியை எம்முறையில் பூஜித்தாலும் உண்மையான மனதுடன் வழிபட்டால் ஆயுர்தேவி மகிழ்ச்சியுடன் அருள்புரிகின்றாள். ஆயுர்தேவி நாமாவளிகள் ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வர்யை நம: ஓம் ஸ்ரீ அன்னவாஹின்யை நம: ஓம் ஸ்ரீ அத்புதசாரித்ராயை நம: ஓம் ஸ்ரீ ஆதிதேவ்யை நம: ஓம் ஸ்ரீ ஆதிபராசக்த்யை நம: ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நம: ஓம் ஸ்ரீ ஏகாந்த பூஜிதாயை நம: ஓம் ஸ்ரீ ஓங்கார ரூபிண்யை நம: ஓம் ஸ்ரீ காலபைரவ்யை நம: ஓம் ஸ்ரீ கிருதயுக சித் சக்தியை நம: ஓம் ஸ்ரீ சக்ரவாஸின்யை நம: ஓம் ஸ்ரீ சித்புருஷ தத்வாயை நம: ஓம் ஸ்ரீ சிவசக்தி ஐக்யஸ்வரூபிண்யை நம: ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நம: ஓம் ஸ்ரீ திரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நம: ஓம் ஸ்ரீ நவகர ரூபிண்யை நம: ஓம் ஸ்ரீ நவமுத்ரா ஸமாராத்யாயை நம: ஓம் ஸ்ரீ பத்மாஸனஸ்தாயை நம: ஓம் ஸ்ரீ யோகாம்பிகாயை நம: ஓம் ஸ்ரீ துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி நிஷேவிதாயை நம: ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபிண்யை நம: ஓம் ஸ்ரீ வேதமந்திர, யந்த்ர சக்த்யை நம: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம், அபாயை நம: ஓம் ஸ்ரீ சிவகுடும்பின்யை நம: ஓம் ஸ்ரீ அருணாசல மேருஸ்தாயை நம: ஓம் ஸ்ரீ கரபீட வரப்ரசாதின்யை நம: ஓம் ஸ்ரீ ஆயுர்தேவ்யை நம: ஆயுர்தேவியை அற்புதமான இந்த நாமாவளிகளால் மஞ்சள்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்திட, சர்வமங்கள சவுபாக்கியங்களும் கிட்டும். | |